சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, தற்போதைய தவெக அரசு திடீரெனக் கலைத்திருப்பதற்கு, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் அரசமைப்புச் சட்ட எதிர்காலத்திற்கு பங்களிக்கும் அரிய வாய்ப்பைத் தற்போதைய அரசு இழந்துவிட்டதாகவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 'ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, தற்போதைய தமிழ்நாடு அரசு திடீரெனக் கலைத்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த வேதனையையும் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். இக்குழுவின் தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப், உறுப்பினர்களான இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே. அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப. (ஓய்வு), தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் ஆகிய மூவருக்கும் அவர் எழுதியுள்ள விரிவான கடிதத்தில், அவர்களது அர்ப்பணிப்புமிக்க பணிகளுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியக் கூட்டாட்சிக் கருத்தியலின் எதிர்காலத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆய்வுப் பணியை, அதன் நிறைவுக்குச் சில மாதங்களே எஞ்சியிருந்த நிலையில் முடிவுக்குக் கொண்டுவந்துள்ள தற்போதைய அரசின் முடிவை எந்தவிதமான அறிவுசார் அல்லது நிர்வாகக் காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு, இந்தியாவில் மாநில சுயாட்சி குறித்த விவாதங்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அடித்தளத்தை அமைத்தது. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே, மாறிவரும் அரசியல், நிர்வாக மற்றும் அரசமைப்புச் சட்டச் சூழலில் ஒன்றிய - மாநில உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதை உணர்ந்து, 2025 ஏப்ரல் மாதம் உயர்நிலைக் குழுவை அமைத்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது வழக்கமான நிர்வாக நடவடிக்கையோ, குறிப்பிட்ட ஓர் அரசின் கொள்கை சார்ந்த முயற்சியோ மட்டுமல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையை வலுப்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர்நிலைக் குழு தனது அறிக்கையின் முதல் பகுதியை 2026 பிப்ரவரி 16 அன்று சமர்ப்பித்தது. அரசமைப்புச் சட்டத்தின் வரலாறு, ஒன்றிய - மாநில உறவுகளின் பரிணாமம், இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றை ஆழமாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை, வெறும் பரிந்துரைகளின் தொகுப்பாக இல்லாமல், மிக உயர்ந்த அறிவுசார் ஆய்வுப் படைப்பாக அமைந்திருந்ததாக ஸ்டாலின் பாராட்டியுள்ளார். உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் இரண்டாம் பகுதி 2027 மே மாதத்தில் நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஆறு மாதங்களே எஞ்சியிருந்தபோது தற்போதைய தமிழ்நாடு அரசு குழுவைக் கலைத்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகத் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் பகுதி தேசிய அளவில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை உருவாக்கியிருந்த நிலையில், இரண்டாம் பகுதியின் கணிசமான ஆய்வுப் பணிகளும் ஏற்கெனவே நிறைவடைந்திருந்த சூழலில், இத்தகைய முடிவை மேற்கொண்டிருப்பது ஏற்புடையதல்ல என்றும், உயர்நிலைக் குழுவின் பணிகளும் மாநிலச் சட்ட ஆணையத்தின் பணிகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதாகக் கூறி, குழுவைக் கலைக்கும் முடிவை நியாயப்படுத்த முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறப்புமிக்க ஆளுமைகளைக் கொண்ட குழுவைக் கலைத்து, அரசமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுப் பணியை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், நாட்டின் அரசமைப்புச் சட்ட எதிர்காலத்திற்கு மேலும் பங்களிக்கும் அரிய வாய்ப்பைத் தற்போதைய அரசு இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு தனது முடிவின் கடுமையான தவறை விரைவிலோ, சற்றுத் தாமதமாகவோ உணர வேண்டிய நிலை ஏற்படும். அரசுகள் மாறலாம்; குழுக்கள் கலைக்கப்படலாம்; ஆனால், வரலாற்றுப் பங்களிப்புகள் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயர்நிலைக் குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் தமது ஆழ்ந்த மரியாதையையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியைத் தொடங்கியதில் தமக்குப் பெருமை இருப்பதாகவும், அதைவிடப் பெருமை அதன் உறுப்பினர்கள் சாதித்திருப்பவற்றில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக் கருத்தியலுக்காகவும் தமிழ்நாடு முன்னெடுத்துள்ள வரலாற்றுப் பயணத்தில், இந்த உயர்நிலைக் குழுவின் முதல் அறிக்கை என்றென்றும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் என்பதையும் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.