சென்னை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிடுவோருக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை மற்றும் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வாரங்களில் ராஜினாமா செய்துவிட்டு,வேறொரு கட்சியில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால், அவர்களை தேர்தல் செலவுக்கு பொறுப்பாக்கும் வகையில் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும். அதற்கு எந்த சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தால், அதைப்பற்றி கேள்வி எழுப்ப போவதில்லை. மாறாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால், இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விதிகளை வகுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சுட்டிக்காட்டப்பட்டது. விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடமிருந்து தேர்தல் செலவை வசூலிப்பது தொடர்பாகவும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பாகவும் எந்த சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா? என கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும். அந்த சட்டம் சரியானாதா, இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கோர்ட் தொடங்கியது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு தீர்ப்பௌ வழங்கியது. அதில், மனுவை தள்ளுபடி செய்ததோடு, இடைத்தேர்தலில் போட்டியிட தடை என சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.எம்எல்ஏ பதவி
தேர்தல் ஆணையம்
எம்எல்ஏக்கள் ராஜினாமா
இன்று தீர்ப்பு