சென்னை: கோயில்களில் செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டணங்களை கோயில் நிர்வாகங்களே முடிவு செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணமாக பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இந்து சமய அறநிலையத்துறை விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில் பக்தர்கள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி கோயில் உள்ளிட்ட 52 கோயில்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் பாதுகாப்பு மையத்தில் ரூ.5 கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே பார்க்கிங் கட்டணம், செருப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்திவிட்டு வரும் பக்தர்கள், தற்போது செல்போனிற்கு டோக்கன் பெற்று கட்டணம் செலுத்த வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அமைச்சர் ரமேஷ், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. செல்போன்களை கொண்டு செல்ல கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், கேமரா இல்லாத செல்போன், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கலாம். அதேபோல் வருவாய் உயர்த்தும் நோக்கில் ரூ.5 செல்போன் பாதுகாக்க வாங்கப்படவில்லை. அது செல்போன் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவே பெறப்படுகிறது. கூடுதலாக வருமானம் வந்தால், அது அந்த கோயிலில் பக்தர்கள் சாப்பிடும் அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அறநிலையத்துறை சார்பாக புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோயில்களில் செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டணங்களை கோயில் நிர்வாகங்களே முடிவு செய்யலாம். அதேபோல் செல்போன்களை கட்டணமில்லாமல் பாதுகாக்க ஏற்பாடு செய்வது குறித்து சூழல் கருதி கோயில் நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.