மோடி அரசே அனுமதி தந்துடுச்சு! ஆனா தமிழ்நாட்டுல விஜய் அரசு தரல! போராட்ட களத்தில் கொதித்த இளைஞர்கள்

  • சென்னை: நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி போராட்டக் களமாக மாறியுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள், அகில இந்திய அளவிலான மாணவர் அமைப்புகளும், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் டெல்லியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    இந்தச் சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தின் நடுவே, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    டெல்லியில் அனுமதி.. தமிழ்நாட்டில் அராஜகம்

    போராட்டக் களத்திலிருந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இளைஞர் கார்த்திக், தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

    அவர் பேசுகையில், நாட்டின் தலைநகரான டெல்லி ஜந்தர் மந்தரில், மத்திய மோடி அரசே மாணவர்களும் இளைஞர்களும் அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக அரசு, மாணவர்கள் சொந்த மாநிலத்தில் போராட்டம் செய்ய அனுமதி வழங்க மறுக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்களைப் பிடித்து கைது செய்கிறது, என்று கொதிப்புடன் தெரிவித்தார்.

    Advertisement

    மாணவர்களின் உரிமைகளுக்காகவும், நீட் விலக்கு கோரியும் போராடும் ஜனநாயகக் குரல்களை ஒடுக்குவதில் தமிழ்நாட்டின் விஜய் அரசு, மத்திய மோடி அரசின் 2.0 போலத்தான் செயல்பட்டு வருகிறது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

    டெல்லி வரை எதிரொலிக்கும் தமிழ்நாடு போராட்டங்கள்

    கடந்த சில தினங்களாகவே நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் வீதிவீதியாக இறங்கிப் போராடி வருகின்றனர்.

    குறிப்பாக, சென்னையில் தலைமை செயலகம் அருகே நடந்த போராட்டங்கள் மற்றும் எழும்பூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் போராட விரும்பும் இளைஞர்கள் மீது ஏவப்படும் இந்த அடக்குமுறை பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

    மாணவர்களின் எதிர்பார்ப்பும்.. அரசின் அணுகுமுறையும்

    நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக இளைஞர்கள், மாநில அரசிடம் இருந்து ஆதரவையும் உறுதியான நடவடிக்கையையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், மாநிலத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்படுவதும், போராடும் மாணவர்களைக் கைது செய்வதும் இளைஞர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அதே நேரத்தில், மாநிலத்தில் போராடும் சொந்த மக்களை ஒடுக்குவது எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வியை போராட்டக்களத்தில் இருக்கும் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    தீவிரமடையும் போராட்டம்!

    டெல்லியில் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டங்கள் குறித்து கார்த்திக் கூறுகையில், நாங்கள் எங்களின் அநீதிக்கு எதிரான குரலை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை. டெல்லியாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி.. மாணவர்களின் கல்வி உரிமையையும் அநீதிகளுக்கு எதிரான போராட்ட உரிமையையும் பறிக்க எந்த அரசு முயன்றாலும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்போம் என உறுதியளித்தார்.

    English Summary

    Modi Govt Allowed Anti Neet Protests, Why Not TVK in TN?: Protesting Youth asks