மணி பிளான்ட் பெயரிலேயே பணம்.. வீட்டில் வைத்தால் உண்மையிலேயே செல்வம் பெருகுமா?

  • சென்னை: மணி பிளான்ட் வீட்டில் இருந்தால் பணம் பெருகும் என்று நம்புகிறீர்களா? இதற்குப் பின்னால் இருக்கும் கதை என்ன? சீனாவின் ஃபெங் சுய் நம்பிக்கை முதல் இந்திய வாஸ்து வரை, 'மணி பிளான்ட்' என்ற பெயர் எப்படி வந்தது என்பதே சுவாரசியமான விஷயம்... அதை பற்றி இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்...!!

    Advertisement

    வீட்டுக்குள் செடி வளர்க்க வேண்டும் என்றால் பலருடைய முதல் தேர்வு மணி பிளான்ட்தான். அதிக கவனிப்பு தேவையில்லை... ஒரு குட்டி தண்டை தண்ணீரில் போட்டாலே வேர்விட்டு வளர ஆரம்பித்துவிடும். பளபளப்பான பச்சை இலைகள், கொடியாகப் படரும் தன்மை என பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்... ஆனால் இந்தச் செடிக்கு 'மணி பிளான்ட்' என்று பெயர் வந்தது ஏன்? உண்மையிலேயே இது பணத்தைக் கொண்டு வருமா?

    Advertisement

    பணம் தரும் செடி என்ற பெயர் எப்படி வந்தது?

    நாம் இந்தியாவில் பொதுவாக மணி பிளான்ட் என்று அழைக்கும் செடியின் தாவரவியல் பெயர் Epipremnum aureum. இதற்கு Golden Pothos, Devil's Ivy என்ற பெயர்களும் உண்டு. ஆனால் ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இது சீனாவைச் சேர்ந்த தாவரமே கிடையாது... இதன் பூர்வீகம் French Polynesia பகுதியாகும்.

    பணத்துடன் இந்தச் செடியைத் தொடர்புபடுத்த என்ன காரணம் தெரியுமா? இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் எதுவும் இல்லை... பல்வேறு கலாச்சார நம்பிக்கைகளும் நாட்டுப்புறக் கதைகளும்தான் முக்கிய காரணம். குறிப்பாக சீனாவின் ஃபெங் சுய் பாரம்பரியத்தில் பசுமையான, வேகமாக வளரக்கூடிய தாவரங்கள் வளர்ச்சி, வளம், செழிப்பு போன்றவற்றின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

    Advertisement

    மணி பிளான்ட் வேகமாகப் படர்ந்து வளர்வதும், அதன் பச்சை இலைகளும் செல்வம் பெருகுவதைப் போல இருப்பதாகக் கருதப்பட்டன. இதனால் வீட்டில் இந்த செடியை வைத்தால் பணமும் செல்வமும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை உருவானது.

    சீன ஃபெங் சுய் கலாசாரத்தில் Money Plant என்ற பெயர் ஒரே ஒரு தாவரத்தை மட்டும் குறிப்பதில்லை. Jade Plant, Money Tree போன்ற பல்வேறு செடிகளும் செல்வம், வளம் ஆகியவற்றின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.. அதனால் இந்தியாவில் நாம் அழைக்கும் மணி பிளான்ட்டை, சீனாவின் பாரம்பரியப் பணச் செடி என்று நேரடியாக சொல்வதும் சரியாக இருக்காது.

    Advertisement

    ஜப்பானிலும் ஒரு கதை இருக்கு

    மணி பிளான்ட்டின் பெயருக்குப பின்னால் ஜப்பானிய நாட்டுப்புறக் கதையும் சொல்லப்படுகிறது. ஒரு ஏழை விவசாயி காட்டில் வித்தியாசமான ஒரு கொடியைக் கண்டெடுத்து வீட்டில் வளர்த்ததாகவும், அது வேகமாகப் பெருகியதால் அதன் கன்றுகளை மற்றவர்களிடம் விற்று பணம் சம்பாதித்து வசதியான வாழ்க்கைக்கு வந்ததாகவும் அந்தக் கதை சொல்கிறது.

    இதுபோன்ற கதைகள் தலைமுறை தலைமுறையாக பரவும்போது, இந்தச் செடி இருந்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் வலுவடைந்திருக்கலாம்.. அதனால்தான் இன்றும் ஒருவருடைய வீட்டுக்குப் போகும்போது, வளமும் செல்வமும் பெருகட்டும் என்ற வாழ்த்துடன் மணி பிளான்ட்டை பரிசாகக் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

    Advertisement

    உண்மையில் பணம் வருமா?

    மணி பிளான்ட் வைத்ததால் ஒருவருடைய வருமானம் அதிகரித்தது, வங்கிக் கணக்கில் பணம் பெருகியது, வியாபாரம் வளர்ந்தது அல்லது வறுமை நீங்கியது என்பதை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை. சீன ஃபெங் சுய் நம்பிக்கையிலும், இந்திய வாஸ்து நம்பிக்கையிலும் மணி பிளான்ட் செல்வத்துடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், அந்த நம்பிக்கை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல.

    அப்படியானால், இன்றும் மக்கள் ஏன் பணம் வரும் என்ற நம்பிக்கையில் இந்தச் செடியை வளர்க்கிறார்கள் தெரியுமா? அதற்கு காரணம் தலைமுறை தலைமுறையாக வந்த கலாசார நம்பிக்கையும், "மணி பிளான்ட் வைத்த பிறகு எனக்கு நல்லது நடந்தது" என்று ஒருவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவத்தைச் செடியுடன் இணைத்துப் பார்ப்பதும்தான்.

    Advertisement

    ஆனால் ஒருவர் செடியை வைத்த பிறகு சம்பாதித்த பணத்துக்கு அந்தச் செடிதான் காரணம் என்று நிரூபிக்க முடியாது. அதேநேரம், இந்த நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் கேலி செய்ய வேண்டிய அவசியமில்லை.

    வாஸ்துவிலும் இதற்கென ஸ்பெஷல் இடம்

    இந்தியாவில் வாஸ்து நம்பிக்கையின்படி மணி பிளான்ட்டை வடக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது என்று கூறப்படுகிறது. சிலர் செடி செழித்து வளர்ந்தால் வீட்டில் செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும் என்றும், செடி திடீரென வாடிவிட்டால் பண நஷ்டத்துக்கான அறிகுறி என்றும் நம்புகிறார்கள்.

    ஆனால் ஒரு செடி வாடுவதற்கு காரணம் பண நஷ்டம் கிடையாது. போதுமான வெளிச்சம் இல்லாமல் இருப்பது, அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவது, வேர் அழுகுவது அல்லது பூச்சித் தாக்குதல் போன்ற தாவரவியல் காரணங்கள்தான் அதற்கு காரணம்.

    நம்பிக்கை சார்ந்த விஷயம்

    மணி பிளான்ட் பணம் தரும் என்ற நம்பிக்கை பலரிடம் இன்றும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை ஆதரிக்கும் அறிவியல் ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் அறிவியல் சொல்லும் விஷயம்... அதே நேரத்தில், வாஸ்து, ஃபெங் சுய் போன்ற பாரம்பரிய நம்பிக்கைகளில் இதற்கு இருக்கும் இடத்தையும் புரிந்துகொள்ளலாம்.

    ஆக, மணி பிளான்ட்டை வளர்ப்பது அவரவர் நம்பிக்கை... ஆனால் பண வரவுக்கு இதுதான் காரணம் என்று அறிவியல் ரீதியாகச சொல்ல முடியாது என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்...!!