சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அதிமுகவில் உருவாகியுள்ள உட்கட்சி மோதல், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் மற்றும் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் ஆகியவை பகீர் ரகமாகவே உள்ளது. தற்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் 6 பேர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. இதனால் கூட்டணி ஆட்சிக்கு தயாரானார் விஜய்.
தொடர்ந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியை அமைத்தார். முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு ஆரம்பம் முதலே "கூட்டணி சார்ந்த ஆட்சி" என்ற அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், அதிமுகவில் தோல்விக்கு பிறகு ஏற்பட்ட அதிருப்தி தவெகவுக்கு சாதகமாக மாறியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். இதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சி கொறடாவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த சம்பவம் அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. உடனடியாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பலரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதே நேரத்தில், தவெக அரசில் அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த வேலுமணி அணியினருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. கட்சித் தாவல் தடைச் சட்டம் மற்றும் "தூயசக்தி" என்ற இமேஜ் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் விஜய் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு தான் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது. வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பின்னர், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரும் தவெகவில் இணைந்தார். இந்நிலையில், இந்த 4 ராஜினாமாக்களும் ஏற்கப்பட்டதால், தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 229 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை தற்போது 115 ஆக குறைந்துள்ளது. தற்போது தவெகவுக்கு நேரடியாக 107 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் அமமுக உறுப்பினர் ஆதரவை சேர்த்து 121 பேரின் ஆதரவு விஜய் அரசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மேலும் 6 அல்லது 7 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தவெக தனிப்பெரும்பான்மைக்கு நெருங்கிவிடும் என்ற கணக்கில் விஜய் செயல்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே வேலுமணி அணியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், வாரிய தலைவர் பதவி, இடைத்தேர்தலில் மீண்டும் சீட், எதிர்கால அமைச்சர் வாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், இந்த விவகாரத்தை திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக விமர்சித்து வருகின்றன. "குதிரை பேர அரசியல்", "அரசியல் வேட்டை", "அதிகாரத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறார் விஜய்" போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம், தவெக தரப்பு இதை முற்றிலும் மறுத்து, "மக்கள் சேவை செய்யும் நோக்கில் தாங்களாகவே எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள்" என விளக்கம் அளித்து வருகிறது. எதுவாக இருந்தாலும், 2026 தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் மிக வேகமாக பலம் சேர்த்து வரும் கட்சியாக தவெக உருவெடுத்து வருகிறது. அடுத்த சில நாட்களில் மேலும் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறார்கள், அதிமுகவில் பிளவு பெரிதாகுமா?, விஜய் உண்மையிலேயே தனிப்பெரும்பான்மை அரசை உருவாக்குவாரா? என்பது தான் தமிழக அரசியலின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.விஜய்
அதிமுக
எம்எல்ஏ ராஜினாமா
விஜய் அரசு
7 பேர் ராஜினாமா
குதிரை பேர அரசியல்
தமிழக அரசியல்