காச வாங்கிட்டு போனவரு.. அதுக்கப்புறம் வரவேயில்ல! திமுக புள்ளி மீது குவியும் புகார்கள்! மலைத்த போலீஸ்

  • சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் பிடி அரசகுமார் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு உரிமம் மற்றும் அங்கீகாரம் வாங்கித் தருவதாக கூறி தங்களிடம் 25 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரை பணம் வசூல் செய்ததாக 51 பள்ளிகளின் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    Advertisement

    சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    பிடி அரசகுமார்

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    அதிகாரிகளுக்கு பங்கு

    இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வசூலித்த பணத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு சென்றதும், 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி உள்ளிட்டவை வைத்ததாக கூறப்படுகிறது.

    பள்ளி அங்கீகார மோசடி

    அது மட்டும் அல்லாமல் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் பிரபல பள்ளிகளில் சீட்டு வாங்கி தருவதாக மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் பணம் பறித்துள்ளனர். மேலும் அவர்களிடம் பெற்ற பணத்துக்கு கணக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மோசடித் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அரசகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

    Advertisement

    51 பேர் புகார்

    அந்த வகையில் அடுத்தடுத்து அரசகுமார் மீது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் உரிமையாளர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக 10 பேர் வரை புகார் கொடுத்து இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 51 ஆக அதிகரித்திருக்கிறது. பள்ளிகளுக்கு இடைக்கால உரிமம் அங்கீகாரம் மற்றும் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார்களாம்.

    150 கோடி மோசடி

    சராசரியாக ஒரு பள்ளிக்கு 30 லட்சம் என வாங்கி இருந்தாலும் மோசடித் செய்த தொகையின் மதிப்பு 150 கோடியை தாண்டலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் வரும் நாட்களில் பிடி அரசகுமார் மீது மேலும் பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளிக்கலாம் எனவும் எதிர்பார்ப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

    English Summary

    Police continue probing alleged fraud involving P.T. Arasukumar as more private school owners file complaints over approval promises.