சென்னை: நிலம் வாங்கும் முன்பு வில்லங்க சான்றிதழ் (EC) பார்ப்பது மிகவும் அவசியம் என்கிறார்களே ஏன் தெரியுமா? குறைந்தது 30 ஆண்டுகளுக்கான EC-ஐ நுணுக்கமாக ஆய்வு செய்த பிறகே நிலம் வாங்குவது பாதுகாப்பானது என்கிறார்களே ஏன் தெரியுமா? அனைத்தையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் வாழ்நாள் கனவு என்றே சொல்லலாம்.. பல வருஷம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை வைத்து வாங்கும் அந்த நிலம், எதிர்காலத்தில் நம்முடைய குடும்பத்துக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்..
அதுக்காக அவசரப்பட்டு ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் நிலம் வாங்கிவிட்டால், அதுவே மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். முக்கியமாக, நிலம் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணங்களில் ஒன்று வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate). ஒரு சொத்தின் கடந்தகால பதிவு வரலாற்றை தெரிந்துகொள்ள இந்த ஆவணம் உதவுகிறது. அந்த நிலம் இதற்கு முன்பு யார் யாரிடம் இருந்தது, யார் அதன் ஓனர், யாரிடமிருந்து யாருக்கு விற்பனை செய்யப்பட்டது, அந்த சொத்து எங்காவது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா, பதிவு செய்யப்பட்ட கடன் அல்லது வேறு வில்லங்கம் உள்ளதா போன்ற தகவல்கள் அனைத்தும் இந்த வில்லங்க சான்றிதழில் தெரிந்து விடும். வில்லங்க சான்றிதழை பார்க்காமல் நிலம் வாங்கினால், ஏற்கனவே வேறொருவருக்கு அந்த நிலம் விற்கப்பட்டிருக்கலாம். அல்லது உரிமையாளர் அந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து பெரிய தொகையை கடனாக பெற்றிருக்கலாம்... இது தெரியாமல் நீங்கள் நிலத்தை வாங்கிய பிறகு, வங்கி அதிகாரிகள் வந்து கடனை திருப்பி செலுத்துமாறு சொல்லி, ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டால்தான் உங்களுக்கே விஷயம் உண்மை தெரியவரும்.. அதுமட்டுமல்ல, குடும்ப சொத்து பங்கீடு தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் சிக்கல் ஏற்படலாம். அப்படிப்பட்ட நிலத்தை தெரியாமல் வாங்கிவிட்டால், பணத்தை இழப்பதுடன் நீதிமன்றப் படிக்கட்டுகளையும் ஏற வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால்தான் வில்லங்க சான்றிதழை சரிபார்த்து நிலம் வாங்க வேண்டும் என்கிறார்கள். அதேபோல வில்லங்க சான்றிதழில் "Nil Encumbrance" என்று இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? "Nil" என்றால் ஒன்றுமில்லை என்று பொருள். குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த நிலத்தின் மீது அரசு பதிவேட்டில் எந்த வில்லங்கமும் பதிவு செய்யப்படவில்லை என்பதையே இது குறிக்கிறது. அதாவது, பதிவு செய்யப்பட்ட அடமானம், வங்கி கடன் அல்லது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்பதற்கான அறிகுறியாகும். இதனால் அந்த சொத்து விற்பனைக்கு உள்ளது என்ற அர்த்தமாகும்.. "Nil" என்று வந்துவிட்டது என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு நிலத்தை வாங்கிவிடவும் கூடாது. சில கூட்டுறவு வங்கிக் கடன்கள் அல்லது குறிப்பிட்ட நீதிமன்ற உத்தரவுகள் உடனடியாக வில்லங்கப் பதிவில் பிரதிபலிக்காமல் இருக்க வாய்ப்பு இருப்பதால், தாய் பத்திரம், தற்போதைய பத்திரம், பட்டா உள்ளிட்ட உரிமை ஆவணங்களையும் சேர்த்து சரிபார்ப்பது அவசியம். எனவே, நிலம் வாங்குபவர்கள் முடிந்தவரை குறைந்தது 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழை பெற்று, அதில் உள்ள பதிவுகளை நுணுக்கமாக சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் சட்ட நிபுணர் அல்லது ஆவண சரிபார்ப்பு தெரிந்தவர்களின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. நிலம் வாங்குவது வெறும் மண்ணை வாங்குவது அல்ல.. அது உங்கள் வாழ்நாள் உழைப்பின் சேமிப்பு. அந்த சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக சரிபார்த்த பிறகே அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். ஆவணங்கள் தெளிவாக இருந்தால்தான், நீங்கள் வாங்கும் நிலம் உண்மையான பாதுகாப்பான சொத்தாக மாறும்..!நிலம் வாங்க போறீங்களா?
வில்லங்க சான்றிதழ் அவசியம்
"Nil Encumbrance" என்று இருந்தால் என்ன அர்த்தம்
30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்