செங்கல்பட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மாமியார்.. மருமகளை சிக்க வைத்த பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்

  • சென்னை: செங்கல்பட்டில் பெரியநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பெருந்தேவி என்பவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். மருமகளுக்கும் மாமியாருக்கும் பெரிய அளவில் ஒற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில் மாமியார் பாத்ரூமில் வலுக்கு விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். அங்கு பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்த பெரிய உண்மையால் மருமகள் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

    Advertisement

    பொதுவாக மாமியார் மருமகள் சண்டை என்பது பல வீடுகளில் இருக்கிறது. மாமியார் மருமகள் இடையே மனஸ்தாபங்கள் வருவது இயல்பு. அந்த மனஸ்தாபங்கள் சில நேரங்களில் தவறாக முடிகிறது. இருவருக்கும் இடையே பேசிய தீர்க்க வேண்டிய ஆண், எதையும் கண்டும் காணாமல் விட்டுவிடுவதே பல சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிறது. செங்கல்பட்டு நகரில் நடந்த மாமியார் மருமகள் இடையேயான சம்பவம் பற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    செங்கல்பட்டு பெரியநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் 61 வயதாகும் பெருந்தேவி. இவர் தனது மகன் வெங்கடேசன் (34), மருமகள் இந்துஜா (28) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துள்ளார். கடந்த செப்டம்பர் 13ம் தேதி மாலை பெருந்தேவி தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் சுயநினைவை இழந்த அவரை மருமகள் இந்துஜா மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இது குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெருந்தேவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில் பெருந்தேவி கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டு போலீசார், அவரது மருமகள் இந்துஜா மீது சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினார்கள். முதலில் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து போலீசார் தங்கள் பாணியில் தீவிரமாக நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்தது. சம்பவத்தன்று குளியலறையில் வழுக்கி விழுந்து மாமியார் பெருந்தேவி சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததை பயன்படுத்தி கொண்டு, அவர் மீது இருந்த ஆத்திரத்தில் மாமியாரை கழுத்தை நெரித்துக்கொலை செய்தாராம் மருமகள். இதனை வாக்கு மூலத்தில் இந்துஜா கூறியதாக போலீசார் கூறினார்கள்.

    இதையடுத்து செங்கல்பட்டு நகர போலீசார், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்து, மாமியாரை கொலை செய்த மருமகள் இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர். குளியலறையில் வழுக்கி விழுந்து சுயநினைவை இழந்த நிலையில் உயிருக்கு போராடிய மாமியாரை, மருமகள் கழுத்தை நெரித்துக்கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Mother-in-law slips and falls in the bathroom in Chengalpattu: Post-mortem report implicates daughter-in-law.