மார்க்கண்டேயனை அராஜகமாக கைது செய்த தவெக அரசு.. ஜனநாயக வழியில் பாடம் புகட்டப்படும்.. கனிமொழி ஆவேசம்

  • சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திக்குளம் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஜூலை 18 ஆம் தேதியன்று இரவில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், பேரவையை பூட்டினாலும் முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம் என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனின் வீட்டுக்கு இன்று காலை வந்தனர். அப்போது, மார்க்கண்டேயன் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

    அவரை கைது செய்ய வந்திருப்பதாக போலீஸார் கூறிய நிலையில், அவர் வீட்டிற்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். போலீஸ் கைது செய்ய வந்திருப்பதை அறிந்த திமுகவினர் மார்க்கண்டேயன் வீட்டிற்கு முன்பு திரண்டு கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டும், போலீஸ் வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் காவல் வாகனத்தில் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில் கூறியுள்ளதாவது: விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல் துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    MP Kanimozhi has condemned the arrest of Vilathikulam DMK MLA Markandeyan, who was taken into custody after a case was registered against him under three sections for making threatening remarks against Chief Minister Joseph Vijay.