சென்னை: கத்தி பேசுவதால் எல்லாமே உண்மை என்றாகிவிடாது என முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் பேசியது குறித்து திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.
ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர் கருணாநிதியைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும். காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார். கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது... Not everything loud is true என கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில், நமது அரசு யாருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளமாக எப்பவுமே இருக்காது. நமது அரசின் அடையாளம், தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவுதான். தமிழ்நாடுதான் என் வீடு, எட்டு கோடி பேர் மக்கள்தான் என் சொந்தங்கள். அந்த 8 கோடி பேருக்கும் சொந்தமான அடையாளமாகத்தான் நம்ம அரசு எப்பவுமே இருக்கும். மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவோம். தமிழக மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்வோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம். கடந்த வாரம் சட்டசபையில் பேசிய போது என் டேபிளில் 3 ஃபைல்கள் இருக்கு, அதை எப்போது ஓபன் செய்ய வேண்டுமோ அப்போது செய்வேன் என சொன்னேன். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் இப்போதே ஓபன் செய்யட்டும் என சவால் விட்டார்கள். 1970 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சத்யநாராயணா பிரதர்ஸ்னு ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிக்கிற டெண்டர் கொடுத்த விவகாரம் பற்றி சர்காரியா கமிஷன் இறுதி அறிக்கை இருக்கிறது. அதில் டெண்டர் வேண்டும் என்றால் 2 சதவீத கமிஷன் தர வேண்டும் என கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டாராம். 16 கோடி ரூபாய் டென்டரில் 2 சதவீதம் கமிஷன் என்றால் 40 லட்சம் ரூபாய் கமிஷன்! 1970 முதல் 1974 வரை தவணையாக 29 லட்ச ரூபாயை லஞ்சமாக பெற்றனர். எனக்கு கருணாநிதி மேல தனி மரியாதை இருக்கிறது இதெல்லாம் எங்களுடயை குற்றச்சாட்டு இல்லை, அந்த அறிக்கையில் இருப்பதைதான் படித்திருக்கிறேன். இவ்வாறு விஜய், திமுக மீதும் பார்ட்டி பண்ட் மீதும் பேசி கொண்டே இருந்த போது திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். ஆனாலும் அவர்களை சபாநாயகர் பேசவிடவில்லை. இதனால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.