சென்னை: அரசு விழாக்களுக்கெல்லாம் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் பல்லவி எம்எல்ஏவின் செயல் அரசியல் விளம்பரமாக தெரிகிறது என காங்கிரஸ் எம்பி (சிவகங்கை) கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கான குழந்தைகள் பராமரிப்பு மையம் (Creches), மகப்பேறு விடுப்பு மற்றும் தந்தையருக்கான விடுப்பு போன்ற குடும்பத்திற்கு சாதகமான கொள்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
பொது விழாக்களுக்குத் தொடர்ந்து பச்சிளம் குழந்தையை அழைத்து வருவது நடைமுறைத் தேவையை விட, அரசியல் விளம்பரத்திற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவுமே செய்யப்படும் முயற்சியாகவே தெரிகிறது. இது குறித்து பல்லவி எம்எல்ஏவுக்கு, முதல்வர் விஜய் உரிய அறிவுரைகளை வழங்குவார் என்று நம்புகிறேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சென்னை ஐஐடி மெட்ராஸில் நடந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு திருவிக நகர் பல்லவி எம்எல்ஏ தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருந்தார். அப்போது அவரது குழந்தையை நடிகை கஸ்தூரி, கொஞ்சி விளையாடினார். பல்லவி குழந்தையுடன் நிகழ்ச்சிகளுக்கு வருவதை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்திருந்தார். கார்த்தி சிதம்பரத்திற்கு டேக் செய்து இயக்குநர் மோகன் ஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: "இதில் என்ன தவறு ஐயா.. நாத்து நடக்கும் போது, கட்டட பணி வரும் போது, ஐடி துறையில் கூட குழந்தையை தூக்கி சென்று பராமரிக்கும் தாய்மார்களை பார்த்தது இல்லயா நீங்கள். விளம்பரமாக இருந்தால் கூட, அலுவலகம் செல்லும் பலருக்கு குழந்தையை பராமரிக்க சிந்தனையை தூண்டலாம். இது புனிதமான தாய்மையே" என மோகன் ஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 2026 சட்டசபை தேர்தலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியவர் பல்லவி. தேர்தல் பரப்புரையின் போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், தேர்தல் பணிகளில் பொதுமக்களிடையே பணியாற்றி கவனத்தை ஈர்த்தார். தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே பல்லவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரான "தளபதி வெற்றிக் கொண்டான் (TVK)" என பெயரிட்டுள்ளார். குழந்தையை விஜய்யிடம் காட்டி ஆசி பெற்றார். தான் வைத்த பெயரை விஜய்யிடம் சொல்லி, காதில் 3 முறை சொல்ல சொன்னார். அதன் பிறகு, சட்டசபை கூட்டத் தொடருக்கு கூட குழந்தையுடனே வந்திருந்தார். இவ்வாறு இவரது செயலை பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்தனர். அதிலும் எதிர்க்கட்சிகள்தான் பல்லவியை விமர்சித்தனர். விளம்பரம் தேட குழந்தையுடன் பல்லவி வருகிறார் என நெட்டிசன்களும் விமர்சித்திருந்தனர்.