சென்னை: 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய், கொள்கை முரண்பாடுள்ளவர்களையும், ஊழல்வாதிகள் என அவர் விமர்சித்தவர்களையும் முதலமைச்சராக்க விரும்பவில்லை என்றால், ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் மக்கள் தீர்ப்புக்கு சென்றிருக்கலாம். ஆனால், அந்த பெருந்தன்மையை விஜய்யிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்" என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக மீது முன்வைக்கப்படும் குதிரை பேரம் புகார்கள் உச்சக்கட்ட பரபரப்பை தந்து கொண்டிருக்கின்றன.. அதிலும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முந்தைய பேச்சு இப்போது விவாதப்பொருளாகியுள்ளது.
எங்களை விஜய் தலைமையிலான தவெக அரசு அப்ரோச் செய்தார்கள். எங்களுக்கும் பிடித்து இருந்தது. இதன் காரணமாக இணைந்து விட்டோம் என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.. எம்ஆர் விஜயபாஸ்கர் சொன்னது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குப் இப்போது மற்றொரு ஆயுதமாக அமைந்துள்ளது.. இதன் அடிப்படையில், அந்தப் பேச்சே குதிரை பேரத்திற்கு சாட்சி எனக் கூறி ஆர்.எஸ். பாரதி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதோடு, நடவடிக்கை இல்லையெனில் கோர்ட்டை நாடுவோம் என்றும் எச்சரித்துள்ளார். சர்ச்சையான தனது முந்தைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், யாரும் தன்னை அழுத்தம் தரவில்லை என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்தேன் என்றும் பல்டியடித்துள்ளார்.. அதாவது தவெக தன்னை அணுகியதாகக் கூறியவர், இப்போது தனது விளக்கத்தை மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான லட்சுமணன், ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் அவர் பேசும்போது, "தமிழ்நாட்டு அரசியலில் "தொங்கு சட்டமன்றம்" என்பது திராவிட இயக்க வரலாற்றிலேயே புதியது. இது இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், 40 முதல் 50 வயதுடையவர்களுக்கும் கூட ஒரு புதிய அனுபவமாகவே உள்ளது. 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய், கொள்கை முரண்பாடுள்ளவர்களையும், ஊழல்வாதிகள் என அவர் விமர்சித்தவர்களையும் முதலமைச்சராக்க விரும்பவில்லை என்றால், ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் மக்கள் தீர்ப்புக்கு சென்றிருக்கலாம். ஆனால், அந்த பெருந்தன்மையை விஜய்யிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர் நடைமுறை அரசியலின் படி, சங்கடமான சூழல்களைத் தள்ளி வைத்துவிட்டு, மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்வதைத் தேர்வு செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வைக்க முற்பட்டதும், அதில் திருமாவளவனை முதலமைச்சராக்க நடந்த முயற்சிகளும் இதில் அடங்கும். 2 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் ஒருவரை எப்படி முதலமைச்சராக்க முடியும்? அதுவும் திருமாவளவன் அப்போது எம்எல்ஏவாகக் கூட இருக்கவில்லை. ஆனால், மற்ற இயக்கங்கள் ஆதரவளித்தால் சட்டம் அதற்கு அனுமதிக்கும். ஆட்சி அமைந்த பிறகு, எடப்பாடியின் பிடிவாதம் காரணமாக அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை விஜய் தரப்பு பயன்படுத்திக்கொள்கிறது. எந்த எம்எல்ஏவாக இருந்தாலும், தவெக தரப்பிலிருந்துதான் அழைப்பு செல்கிறது. "எங்க இருக்கீங்க சார், எப்படி இருக்கீங்கண்ணே, உடம்பு சரிதானா?" என்று கேட்கத் தொடங்கிய அந்த போன் கால் தான், குதிரை பேரத்தின் அல்லது பேச்சுவார்த்தையின் முதல் படிநிலை. எம்.ஆர். விஜயபாஸ்கர் மிகவும் வெள்ளந்தியானவர் .. செய்தியாளர்களிடம் பேசும்போது, "அப்ரோச் பண்ணாங்க, அந்த டீல் எனக்குப் பிடிச்சிருந்தது" என்பது போல இயல்பாக சொன்ன கருத்து, இன்று ஒரு கூடுதல் ஆதாரமாகிவிட்டது. எல்லாருமே சில நேரங்களில் நேர்மையற்றவர்களாக இருக்கும்போது, விஜய்யை மட்டும் 24 மணி நேரமும் நேர்மையானவராக இருக்கச் சொல்வது நடைமுறைக்கு மாறானது." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.எம்ஆர் விஜயபாஸ்கர்
பல்டி அடித்தாரா விஜயபாஸ்கர்
தொங்கு சட்டமன்றம்
திருமாவளவன் - தவெக அமைச்சரவை