நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி.. அதிமுகவில் இருந்து விலக இதுவே காரணம்.. ஆதங்கப்பட்ட எம்ஆர் விஜயபாஸ்கர்

  • சென்னை: அதிமுகவில் இருந்து 6வது நபராக எம்.ஆர் விஜயபாஸ்கர் விலகியுள்ளார். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், அண்ணன் எடப்பாடி தலைமையை ஏற்காமல் நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை என்றும், தீய சக்தி திமுகவுடன் கைகோர்க்க திட்டமிட்டதை தான் என்னால் தாங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை பிரச்சினை உருவானது. எஸ்பி வேலுமணி தரப்பினர் விஜய் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் மீண்டும் உட்கட்சி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அடுத்ததாக இசக்கி சுப்பையா உள்பட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது. தொடர்ந்து 5 வதாக சி விஜயபாஸ்கரும், 6-வதாக எம்.ஆர் விஜயபாஸ்கரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து அதிமுகவில் இருந்து விலகியுள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்து ஆதங்கத்துடன் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது

    மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் லட்சியப் பாதையிலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான். பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல; இரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். அம்மா அவர்களின் மறைவுக்குப் பின், இந்த இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

    Advertisement

    கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் நாம் சந்தித்தது அரசியல் மட்டும் அல்ல; அப்பட்டமான அதிகார அடக்குமுறையும், நம் தொண்டர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட துயரங்களும் தான். அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. என் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகள் மற்றும் என் குடும்பத்தினர்கள் மீதும் 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டது. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது.

    நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி

    அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும். கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணைநின்ற கழக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும்..

    Advertisement

    ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ..

    தீய சக்தி திமுகவுடன் கைகோர்க்க முடியுமா?

    இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம், நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்?

    Advertisement

    அண்ணன் எடப்பாடியார் அவர்களே.. நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம்.

    மிகுந்த மன வேதனையுடன்

    ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாகக் மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை.

    Advertisement

    என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்.. என்று கூறியுள்ளார்.

    English Summary

    MR Vijayabaskar Explains Why He Quit AIADMK and Resigned as MLA: MR Vijayabaskar said he resigned from the party and his MLA post because he could not accept AIADMK aligning with the DMK, which he had earlier criticised. He explained that the political decision was against his principles.