எம்ஆர் விஜயபாஸ்கரும் நாளை தவெகவில் இணைகிறார்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சி. விஜயபாஸ்கரை தொடர்ந்து எம்.ஆர் விஜயபாஸ்கரும் நாளை தவெகவில் இணைகிறார். சென்னை மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்து, தனது அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர உள்ளதாக எம் ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான எம் ஆர் விஜயபாஸ்கர் நேற்று முன் தினம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து நேற்று அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நாளை நான் தவெகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக தவெகவில் இணைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நாளை தவெகவில் இணைகிறேன்

    சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர். இதில், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா உள்ளிட்ட 4 பேர் உடனடியாக தவெகவில் ஐக்கியமாகினர். சி. விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். கரூர் தொகுதி எம்.எல்.ஏவான எம்.ஆர் விஜயபாஸ்கரும் நேற்று முன் தினம் தனது பதவியை ரஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    சபநாயாகரை நேரில் சந்தித்து தனது பதவியை எம்.ஆர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் நேற்று நீண்ட நெடிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். எம்.ஆர் விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். நாளை மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகிறார்.

    Advertisement

    விஜய்யை நேரில் சந்திக்கும் விஜயபாஸ்கர்கள்

    எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அதே நிகழ்ச்சியில் தவெகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். மற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணையும் போது விஜய் அவர்களை நேரில் சந்திக்கவில்லை. ஆனால் நாளை நடக்கும் நிகழ்வில் விஜய் சந்திக்காவிட்டாலும், பட்டினப்பாக்கம் இல்லத்தில் வைத்து விஜய் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கரை சந்திப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூர் மாவட்ட செயலாளராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து, அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டதால் எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், மீண்டும் கட்சியில் முக்கிய பதவி வழங்காதது மேலும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதையடுத்து, அதிமுகவில் இருந்து விலகிய எம்.ஆர் விஜயபாஸ்கர், தவெகவில் இணைவதாக அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    ஏற்கனவே தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் அதிகம் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டு விஜயபாஸ்கர்களும் தவெகவில் இணைந்தால், எதிர்க்கட்சிகளின் பலமான விமர்சனத்தை சந்திக்க நேரிடும். இதை சமாளிக்க தவெகவும் வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

    யார் இந்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

    கரூர் அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கியவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,. தாந்தோணிமலை அதிமுக ஒன்றியச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இவருக்கு 2015ஆம் ஆண்டு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2016 சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

    Advertisement

    அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியத்தை 441 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட போது எடப்பாடி பக்கம் நின்றார். எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் 2021 சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை சந்தித்தார்.

    விஜயபாஸ்கர் மீதுள்ள குற்றச்சாட்டுக்ள்

    எம்.அர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மிரட்டல், கடத்தல், தாக்குதல், ஆவண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் திமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் எம்ஆர் விஜயபாஸ்கர் கைதும் செய்யப்பட்டார்.

    Advertisement

    போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கும் விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் நடத்தியிருந்தனர்.

    English Summary

    MR Vijayabaskar has officially announced that he will join Vijay's Tamilaga Vettri Kazhagam (TVK) on Wednesday. He will join the party alongside C Vijayabaskar at the Mamallapuram event and said he is looking forward to continuing his political journey with renewed enthusiasm.