சென்னை: அண்மையில் மயிலாப்பூரில் உள்ள திருமயிலை பறக்கும் ரயில் நிலைய அறையில் 55 வயதான விஜயா என்ற பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையேயான கடற்கரை வழித்தடத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்ற பிறகு பறக்கும் ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் விரைவில் கூடுதல் பாதுகாப்பு, விளக்கு வசதிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை உள்ள பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், திருமயிலை, மந்தைவெளி, கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, பரங்கிமலை வரை சுமார் 20 பறக்கும் ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் திருமயிலை, சேப்பாக்கம், வேளச்சேரி, பரங்கிமலை போன்றவற்றில் மட்டும் கழிவறை வசதிகள் உள்ளன. மற்ற ரயில் நிலையங்களில் கழிவறை வசதி கூட இல்லை.பாழடைந்த கட்டிடங்களாக பராமரிப்பு இன்றி உள்ளன. அசுத்தமாகவும், படுமோசமாகவும், மக்கள் நடந்து செல்லவே அச்சப்படும் அளவிற்கு ரயில் நிலையங்களில் உள்ள பகுதிகள் இருக்கின்றன.
இந்நிலையில் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள், சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரையிலான 20 பறக்கும் ரயில் ரயில் நிலையங்களில், மேம்படுத்தப்பட்ட மின்விளக்கு வசதிகள், கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பராமரிப்பு உள்ளிட்ட மாற்றங்களை பயணிகள் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். காரணம் தமிழக அரசு பறக்கும் ரயில் வழித்தடத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் போல ஏசி ரயில்கள் ஓடப்போகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களை போல அதிநவீன வடிவில் பறக்கும் ரயில் நிலையங்கள் மாறப்போகிறது. இதற்கு ஒரு ஒப்பந்தம் முடிக்கப்பட வேண்டும். தெற்கு ரயில்வேயிடமிருந்து எம்ஆர்டிஎஸ் ரயில் போக்குவரத்து அமைப்பின் சொத்துகளைத் தன்வசப்படுத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது; இதற்கான ஒப்பந்தம் நவம்பர் மாத இறுதிக்குள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முடிந்தால் எல்லாமே மாறிவிடும் என்று கூறிவிட முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் நடைபெறவாய்ப்பு அதிகம். ஏனெனில் சென்னை மெட்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களும் வந்துவிடும் என்பதது தான் முக்கியமான காரணம். இதுபற்றி சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துகளின் மதிப்பீட்டு விவரங்களை தெற்கு ரயில்வே அடுத்த வாரம் சமர்ப்பிக்க போகிறது. "அந்த விவரங்கள் கிடைத்தவுடன், உயர் மட்ட அளவில் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு, மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். பாதுகாப்பு, மின்விளக்கு வசதிகள் மற்றும் தூய்மைப் பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே நாங்கள் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையாக இருக்கும்" என்றார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 90 நாட்கள் கொண்ட மாற்றக் காலம் தொடங்கும். ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், மேம்பாலப் பாதைகள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள், மேல்நிலை மின்சார அமைப்புகள் என 133 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் மற்றும் சொத்துகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மற்றொரு ஒப்பந்தத்தின்படி, இந்த ரயில் நாம் முதலிலயே கூறியபடி பறக்கும் ரயில் வழித்தடம் முற்றிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிஎம்ஆர் நிறுவனமான சென்னை மெட்ரோ தான், இனி பாதுகாப்பு, டிக்கெட் வழங்குதல் மற்றும் தூய்மைப் பராமரிப்பு பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்கும். பழுதடைந்த மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (escalators) படிப்படியாகச் சரிசெய்யப்படும்; இதற்கான உபகரணங்களை வாங்குவதற்கும் நிறுவுவதற்கும் சுமார் ஓராண்டு காலம் தேவைப்படும். புதிய ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பதால், அடுத்த 24 மாதங்களுக்கு ரயில்களை இயக்குதல் மற்றும் பராமரிக்கும் பணிகளைத் தெற்கு ரயில்வேயே தொடர்ந்து மேற்கொள்ள போகிறது. வருவாய் தொடர்பான ஏற்பாடுகள், இந்த மாற்றக் கால ஒப்பந்த நிபந்தனைகளின்படி தொடர்ந்து செயல்படும். இதுபற்றி சிஎம்டிஏ அதிகாரி கூறுகையில், பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ வசம் வந்த உடன், அனைத்து வசதிகளும் முதல் நாளிலேயே மேம்பட்டுவிடும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்க கூடாது. ஓராண்டுக்குள் பயணிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணலாம். மூன்றாண்டுகளுக்குள், எம்.ஆர்.டி.எஸ் நிலையங்கள் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையான தரத்திற்கு உயரும்" என்றார். திருமயிலை எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தில், வி. விஜயா (55) என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்தது. அக்டோபர் 8-ஆம் தேதி காணாமல் போன விஜயாவின் உடல், நான்கு நாட்களுக்குப் பிறகு அதே மயிலை ரயில் நிலையத்திலிருந்த ஒரு அறையில் கண்டெடுக்கப்பட்டது. கழிப்பறையைத் தேடிச் சென்றபோது, அவர் ஒரு திறந்த இடைவெளி வழியாகக் கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு பின்னர் பறக்கும் ரயில் ஒப்பந்தம் என்ன ஆனது என்பது குறித்த விவாதங்கள் அதிகம் ஆனது. இந்த சூழலில் தான் ஆகஸ்ட் மாதத்தில், சொத்து பரிமாற்றம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 2011-ல் முன்வைக்கப்பட்ட இந்த இணைப்புத் திட்டம் தற்போது ஒரு வழியாக நிறைவை நோக்கி செல்கிறது. 1995ம் ஆண்டு சேவையை தொடங்கிய எம்.ஆர்.டி.எஸ் என அழைக்கப்படும் பறக்கும் ரயில் வழித்தடம் இனி மெட்ரோ வழித்தடமாக உருமாறப்போகிறது.தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் வரலாம்? வரலாற்றில் இல்லாத மாற்றம் வரப்போகிறது
மத்திய அரசு, மாநில அரசுகளை விமர்சிக்கக் கூடாது என சுற்றிக்கை.. அரசு ஊழியர்களின் ரியாக்சன்