தனியார் மயமாகிறதா முதல்வர் படைப்பகங்கள்? - சென்னை மாநகராட்சி விளக்கம்

  • சென்னை: முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் படைப்பகங்களுக்குத் தேவையான பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பணியாளர்களுக்காக மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதல்வர் படைப்பகங்களை, தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பதற்கான பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஆவணங்களில், இதுவரை 'முதல்வர் படைப்பகம்' என்று அழைக்கப்பட்டு வந்த இடங்கள், 'படைப்பகம்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.

    Advertisement

    சென்னையில் மொத்தம் 15 இடங்களில் இந்த படைப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நூலகம் மற்றும் அமைதியான சூழலை வழங்கும் இடமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், முதல்வர் படைப்பகங்களை தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பதற்கான பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் படைப்பகங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்ற குரல்கள் எழுந்தன.

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதர 9 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    Advertisement

    இந்த 15 முதல்வர் படைப்பகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியால் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், இதை சிறப்பாக நடத்துவதற்காக, இந்தப் படைப்பகங்களுக்குத் தேவையான பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பணியாளர்களுக்காக மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Chennai Corporation administration has stated that Mudhalvar Padaippagam have not been privatized. It has been clarified that tenders have been invited solely to recruit personnel for roles such as security guards, sanitation workers, and receptionists required for these padaippagam.