முள்ளிவாய்க்கால் நினைவு நாள்! 17 ஆண்டுகள் ஆகியும் மாறாத ஈழத்தமிழர்களின் நிலை!

  • சென்னை: 2009ம் ஆண்டு மே மாதம், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில், இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும், மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றும் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

    Advertisement

    இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஆகியும் கூட, இன்னமும் அங்குள்ள ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை என்பதே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

    Advertisement

    கஞ்சி விநியோகம்

    இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி உரிமைக்காக போராடிய ஈழ தமிழர்களை கொன்று குவித்து, போர் முடித்து வைக்கப்பட்ட நாள்தான் மே.18. நெருக்கடியான போர் சூழலில் தமிழ் மக்களின் உயிரை காப்பாற்றியது, உப்பில்லாத அரிசி கஞ்சிதான். எனவே முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் இந்த சோகத்தை நினைவுகூறும் விதமாக கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்படும்.

    அந்த வகையில் மே.12 தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வரை கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இன்னமும் தமிழர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவுக்கு உயராமல் இருக்கிறது.

    Advertisement

    மனித உரிமை அமைப்புகள்

    போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை இராணுவத்தின் நடமாட்டம் மற்றும் முகாம்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. சாதாரண மக்களின் அன்றாட வாழ்விலும், சிவில் நிர்வாகத்திலும் இராணுவத்தின் மறைமுகக் கண்காணிப்பு தொடர்வது மக்களின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

    17 ஆண்டுகள் ஆகியும் மாறாத நிலை

    தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்கள், கடற்கரைப் பகுதிகள் இன்னும் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. 'உயர் பாதுகாப்பு வளையங்கள்' என்ற பெயரில் இராணுவம் பல இடங்களைத் தன்வசம் வைத்துள்ளது. மேலும், பௌத்த மத அடையாளங்கள் இல்லாத வடக்கு-கிழக்கு பகுதிகளில், திட்டமிட்டு பௌத்த விகாரைகளை அமைப்பதன் மூலம் நிலங்களும் கலாச்சாரமும் ஆக்கிரமிக்கப்படுவதாகத் தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    Advertisement

    பொருளாதார வீழ்ச்சி

    அதேபோல போரின் போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இதுவரை என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருக்கும் தங்களின் உறவினர்களைத் தேடி, தமிழ் தாய்மார்கள் வடக்கு-கிழக்கில் நடத்தும் போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

    இது ஒருபுறம் எனில், மறுபுறம் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

    வேலை வாய்ப்பு இல்லை

    போரினால் கல்வி மற்றும் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் முறையான தொழிற்சாலைகளோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ இல்லை. இதனால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் முடங்கியுள்ளது.

    Advertisement

    வாழ்வாதாரத்தை மீட்க சிறுதொழில் தொடங்க நினைத்த தமிழ் பெண்கள், நுண்கடன் (Microfinance) வழங்கும் நிறுவனங்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் செலுத்த முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்படும் அவலம் வடக்கில் பரவலாக நடந்து வருகிறது.

    புலம் பெயரும் தமிழர்கள்

    வாழ்வதற்கு வழியற்ற சூழலில், வடக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஐரோப்பா, கனடா, மற்றும் தமிழகத்திற்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

    பாசிடிவ் மாற்றங்கள்

    இதெல்லாம் இருந்தாலும் சில பாசிடிவ் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஈழ தமிழர்கள் கல்வியில் கவனம் செலுத்தியுள்ளனர். போர்க்காலத்தில் தங்களின் கல்வி உரிமையை இழந்த தமிழர்கள், தற்போது மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் மூலமாகப் புதிய தலைமுறை பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர்.

    Advertisement

    அதேபோல வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்குத் தாங்கிப் பிடித்து வருகின்றனர்.

    English Summary

    Mulivaikkal Remembrance Day is observed annually on May 18th to commemorate the hundreds of thousands of Tamil people who perished or went missing in the Mulivaikkal region of Sri Lanka during the final stages of the Eelam War in May 2009. In keeping with this tradition, the day of remembrance is being observed today as well.