மும்பை: கணவரை பிரிந்து அமெரிக்காவில் வசித்து கொண்டு ஐடி துறையில் பணியாற்றி வரும் பெண் மாதம் ரூ.8 லட்சம் சம்பாதிக்கிறார். இவர் தனது கணவரிடம் இருந்து பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.1 லட்சம் கோரினார். அப்போது கணவரை விட அதிகம் சம்பாதிக்கிறார் எனக்கூறி நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
மகாராஷ்டிராவை சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் ஐடி துறையில் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள். இவர்கள் 4 பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே தான் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிய முடிவு செய்தனர்.
இதையடுத்து விவாகரத்து கோரி புனே குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.மூத்த குழந்தை கணவரின் கட்டுப்பாட்டிலும், 2வது குழந்தை மனைவியின் கட்டுப்பாட்டிலும் வளர உத்தரவிட்டது. அந்த பெண் 2011ம் ஆண்டில் இருந்தே அமெரிக்காவில் வசித்து வந்தார். இதனால் அவர் தனது 2வது குழந்தையுடன் அமெரிக்காவில் உள்ளார். அங்கு தனியார் ஐடி நிறுவனத்தில் மாதம் ரூ.8 லட்சம் சம்பளம் பெறுகிறார். இதற்கிடையே தான் கணவனிடம் இருந்து அந்த பெண் நிரந்தரமாக ஜீவனாம்சம் கோரியிருந்தார். அதனை ஏற்க குடும்பநல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தான் ஜீவனாம்சம் தொடர்பாக குடும்ப நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பையில் உள்ள மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில்,''2011ம் ஆண்டு முதல் நான் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன். இங்கு அதிகப்படியான செலவு வருகிறது. இங்குள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்ப என்னை மாற்றி கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை. இதனால் தனக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சத்தை பராமரிப்பு செலவாக பிரிந்த கணவரிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டும். என்னுடைய கணவருக்கு புனேவில் அதிகபபடியான சொத்துகள் உள்ளன'' என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது அந்த பெண்ணின் முன்னாள் கணவர் சார்பில் அந்த பெண்ணின் நிதி நிலைமை உள்பட பிற விவகரங்கள் தாக்கல்செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி தன்னை விட மனைவி அதிகப்படியாக சம்பாத்தியம் செய்வதாகவும், தனது மூத்த மகன் மற்றும் பெற்றோரை கவனிக்க வேண்டி உள்ளது. மூத்த மகனின் வெளிநாட்டு படிப்பு செலவை ஏற்றுள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிமன்றம், ''பராமரிப்பு செலவுக்காக ரூ.1 லட்சம் கேட்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டில் வசிப்பதை காரணம் காட்டி பராமரிப்பு செலவுக்கு என்று தனியே பணம் தர முடியாது. அதுமட்டுமின்றி நிதி சார்ந்த விஷயத்தில் நீங்கள் (பெண்) சுதந்திரமக உள்ளீர்கள். உண்மையில் பராமரிப்பு செலவு என்பது வேலைக்கு செல்ல இயலாமல் உள்ளவர்களுக்கானது. மேலும் ஆவணங்களின்படி பார்த்தால் உங்களின் மாதசம்பளம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். கணவரும் நீங்களும், ஐடி துறையில் உள்ளீர்கள். ஏஐ உங்களின் துறையில் அதிகரித்து வருகிறது. இதனால் ஜாப் செக்யூரிட்டிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு செலவுக்கு உத்தரவிட முடியாது. அதேவேளையில் பிரிந்த கணவர் வழக்கு செலவிற்காக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்'' என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பாரதி டங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.