முரசொலி மாறன் சொன்ன பிசாசு அரசியல் மீண்டும் வருகிறதா? ஸ்டாலின் சொன்ன பழைய திமுக இதுதானா?

  • சென்னை: "மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் அதிகாரம் இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதுதான் வரலாறு. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவில் பாஜக அரசுக்கு ஆதரவளித்து, மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற திமுக தயாராகி வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள மணி, "தொகுதி மறுவரையறை மசோதாவை, ஆரம்பத்தில் இந்த அளவிற்கு தீவிரமாக எதிர்த்தது திமுக தான். இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் இந்த அளவிற்கு எதிர்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு தொகுதி மறுவரையறை மசோதாவில் பாஜகவை ஆதரிப்பது என்ற நிலைக்குத் திமுக நகரத் தொடங்கிவிட்டது.

    Advertisement

    "பழைய திமுகவைப் பார்ப்பீர்கள்"

    "பழைய திமுகவைப் பார்ப்பீர்கள்" என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியது மிகச் சரியான வார்த்தை. பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் யாருடன் வேண்டுமானாலும் போய் இணைவதுதான் பழைய திமுக. மசோதாவைக் கொளுத்திவிட்டு, இன்றைக்கு அதே மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதும், யார் எதிர்த்தார்களோ அவர்களுடனேயே போய் சேர்வதும் தான் பழைய திமுகவின் வரலாறு.

    எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் அவருடன் சென்று கூட்டணி அமைத்தது பழைய திமுக.. 1999-ல் "மதவெறிக்கு எதிராக" என்று பேசிவிட்டு, 17 நாட்களில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து 4 ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தது அதே பழைய திமுகதான்.

    Advertisement

    முரசொலி மாறன் சொன்ன வார்த்தை

    அன்று "பிசாசிடமிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் பாஜகவுடன் சேர்கிறோம்" என்று முரசொலி மாறன் நாடாளுமன்றத்திலேயே பேசினார். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே நடந்த தேர்தலில் தோற்றுப்போனார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

    "இன்னும் 6 மாதத்தில் திருச்சி சிவா மத்திய அமைச்சராகிவிடுவார்" என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகிறார். ஆனால் திமுக தலைமையோ, ஸ்டாலினோ, கனிமொழியோ, உதயநிதியோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கு மவுனம் சம்மதம் என்றுதானே அர்த்தம்?

    பாஜக பக்கம் நகரும் திமுக?

    கடந்த கால வரலாறும் தெரிந்தவர்களுக்கு இவர்களுடைய அரசியல் நடைமுறை நன்றாகவே புரியும். அதிகாரத்தில் இல்லாமல் திமுகவால் இருக்கவே முடியாது. திமுக, பாஜகவை நோக்கி நெருங்கத் தொடங்கிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற, நேரடியாக ஆதரித்தோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தோ, நிச்சயம் மோடி அரசைக் காப்பாற்றுவார்கள்.

    Advertisement

    இன்றைக்கு மோடியுடன் போய் இணையப் போகின்ற திமுகவும் அந்தப் பழைய திமுகதான். ஆகவே மு.க.ஸ்டாலின் மிகத் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார், "பழைய திமுகவைப் பார்ப்பீர்கள்" என்று. அதனை நாம் விரைவில் பார்க்கத் தான் போகிறோம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் மணி.

    English Summary

    Murasoli Maran's Devil Remark Returns? Is This the "Old DMK" MK Stalin Spoke About?