இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார்! மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

  • சென்னை: இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75.

    Advertisement

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர். அண்மையில் மீசையை முறுக்கு 2 என்ற படத்தின் விழாவில் ஒன்றில் தேவா கலந்து கொண்டிருந்தார்.

    Advertisement

    பிரசாந்த் நடித்த வைகாசி பிறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தேவா, இசைமையப்பாளராக அறியப்பட்டார். ரஜினியின் பெயரை தாங்கி வரும் பிஜிஎம்மை அண்ணாமலை படத்தில் உருவாக்கியவர் தேவாதான். அந்த பிஜிஎம் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் இருந்தது. இந்த பிஜிஎம்மை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    யார் இந்த தேவா?

    தேவா மயிலாப்பூரில் 1950-ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே மாங்காடு என்பதாகும்.

    இசை மீதான ஆர்வத்தின் காரணமாக இவர் மற்றொரு இசையமைப்பாளரான சந்திரபோஸுடன் இணைந்து 1973 ஆம் ஆண்டு இசைக் குழுவை தொடங்கினார். இவர் தூர்தர்ஷன் பொதிகை சேனலில் பணியாற்றியிருக்கிறார். வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்காக இசையமைத்திருக்கிறார். 1986-ஆம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா.

    Advertisement

    இதையடுத்து இவர் மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு, இந்து, ரசிகன், தாய்மாமன், அண்ணாமலை, பாட்ஷா, குஷி என ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

    கானா பாடல்

    கானா பாடல்களில் கொடி கட்டி பறந்தவர் தேவா. இவரது புதிய டிரென்ட் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. எனவே கானா என்றாலே தேவா என்றாகிவிட்டார். "தண்ணீ கொடம் எடுத்து தங்கம் நீ", "சலோமியா", "விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி", "கவலைப்படாதே சகோதரா.." "காத்தடிக்குது காத்தடிக்குது" உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்.

    அது போல் அண்ணாமலையில் ஒரு பெண் புறா என்ற மெலோடியையும் கொடுத்து ரஜினியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். தேவா தனது சகோதரர்கள் சபேஷ், முரளி ஆகியோருடன் இளையராஜாவின் இசைக் குழுக்களில் இசைக் கருவியை வாசித்து வந்தார். இதையடுத்து மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு உள்ளிட்ட படங்கள் வெளியானதும் தேவாவின் இசை பட்டித்தொட்டியெங்கும் பரவியது.

    Advertisement

    தேவி கருமாரியம்மன்

    திருவேற்காடு தேவி கருமாரியம்மனின் தீவிர பக்தரான தேவா, 36 ஆண்டு காலம் இசையுலகில் கொடி கட்டி பறந்தார். இவர் மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசை பயின்றவர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தேனிசைத் தென்றல் என தேவாவை அழைத்தார். அந்த பெயரே நிலைத்து நின்றது. மேலும் இவரை கானாவின் காட்ஃபாதர் என்றும் அழைக்கிறார்கள். ஏராளமான சாமி பாடல்களையும் பாடியுள்ளார். வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாடலை இவர்தான் பாடினார். அந்த பாடல் இன்றும் மதுரையில் வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் ஒலிக்கும்.

    விருதுகள்

    வைகாசி பிறந்தாச்சு, குஷி உள்ளிட்ட படங்களுக்காக இவருக்கு தமிழக அரசின் திரைப்பட விருது கிடைத்தது. காதல் கோட்டை படத்திற்காக பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இசையமைப்பாளர்தான். தேவாவின் சகோதரர் சபேஷ் கடந்த ஆண்டு காலமானார். அது முதலே தேவா மிகவும் மனதளவில் உடைந்து போய்விட்டார் என்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை தேவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.