முஸ்தபா வந்துட்டாரு.. பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் பற்றி ஜவாஹிருல்லா கேட்டாரே? தவெக பதில் எங்கே

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. விழுப்புரம் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாமல், தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

    Advertisement

    மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சிவகாசி எம். முஸ்தபா இது தொடர்பாக வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், தவெக முஸ்தபா முன்வைத்துள்ள விமர்சனங்கள் அவரது வாதத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்

    Advertisement

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா தனிப்பட்ட விமர்சனங்களையும், தரம் தாழ்ந்த சொற்களையும் பயன்படுத்தியிருப்பது அவரது வாதத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.

    "வாங்கிய காசுக்கு மேல் கூவுகிறார்" என்று திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டியுள்ள முஸ்தபாவுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன்.. மக்கள் நலனுக்காகக் குரல் கொடுக்க நாங்கள் யாரிடமும் காசு வாங்க வேண்டிய அவசியமில்லை.

    Advertisement

    தவெக கூட்டணி

    கூட்டணியில் இருப்பதால் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயமும் எங்களுக்கு இல்லை. கூட்டணியில் இருந்தாலும் தவறான முடிவுகளை விமர்சிப்போம்; மக்கள் நலனுக்கான திட்டங்களை வரவேற்போம். அதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை அரசியல்.

    பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் மக்கள் வரிப் பணம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் குறித்துதான் எங்கள் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ) மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) விதிமுறைகளுக்கு முரணாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவு அமைந்துள்ளது.

    Advertisement

    "ஜவாஹிருல்லா ஏன் எதிர்க்கிறார்?"

    எனவே தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, "ஜவாஹிருல்லா ஏன் எதிர்க்கிறார்?" என்று கேட்பதைவிட, "இந்த இடத்தில்தான் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? மீனவர்களுக்கு பாதிப்பு இல்லையா? சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டனவா?" என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

    மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தியதை மட்டும் சுட்டிக்காட்டி "உண்மையான மீனவ நண்பன்" என்று கூறிக் கொள்வது போதாது. மீனவர்களின் வாழ்வாதாரம் என்பது ஒரு நிவாரணத் தொகையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.

    போட்டுத் தாக்கிய முஸ்தபா

    மேலும், "கூட்டணி விசுவாசம்", "செஞ்சோற்றுக் கடன்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அரசியல் விவாதத்தை தனிப்பட்ட தாக்குதலாக மாற்ற வேண்டாம். எங்களுக்கு எந்தக் கட்சியிடமும் செஞ்சோற்றுக் கடன் கிடையாது. எங்களுக்கு இருப்பது மக்களிடம் பெற்ற வாக்கின் கடன் மட்டுமே.

    Advertisement

    அந்தக் கடனைத் தீர்ப்பதற்காகத்தான் மக்கள் பணம் செலவிடப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்கிறோம். . கேள்விக்கு பதில் சொல்லுங்கள்; கேள்வி கேட்டவரை குறை சொல்லாதீர்கள்... கேள்வி கேட்பது மக்கள் நலனுக்கான ஜனநாயகக் கடமை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Mustafa Back in Focus.. Pattinapakkam Secretariat Row.. Jawahirullah Asked This, So Where Is the TVK Answer