சென்னை: சென்னை மயிலாப்பூரில் 19 வயதான ஏசி மெக்கானிக்கான சத்தியசீலன் என்ற இளைஞரை ஓட ஓட விரட்டி 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய நண்பர்களை பார்க்க வந்த இடத்தில், முன் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தவெக ஆட்சிக்கு வந்த பின் தலைநகரில் கொடூரமாக கொலை சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன். 19 வயதான இவர் 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு, ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர். மீண்டும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று வேளச்சேரியில் இருந்து மயிலாப்பூருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவர். இருப்பினும் அவ்வப்போது வேளச்சேரியில் இருக்கும் பழைய நண்பர்களை சத்தியசீலன் சந்தித்து வந்திருக்கிறார். அப்படி சத்தியசீலன் தனது பழைய நண்பரான சபரி என்பவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென சத்தியசீலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளது. இதன்பின் சத்தியசீலனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். சத்தியசீலனின் தலை, கால், தொண்டை பகுதிகளில் கத்தியால் வெட்டி இருக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பலும் சுமார் 20 வயதுடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் சத்தியசீலன் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றவர் பட்டப் பகலில் கொலை - திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்!