'சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு' எல்லைகாத்த மாவீரன் பட்டம் தந்து நினைவு கல்வெட்டு திறந்த சீமான்!


  • சென்னை: தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் மன்னன் என்றழைக்கப்பட்ட வீரப்பன் பெயரில் நினைவு கொடிக் கம்பத்தை சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் அமைத்துள்ளனர். இந்த வீரப்பன் நினைவு கொடி கம்பத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திறந்து வைத்தார்.

    Advertisement

    தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா என 4 மாநில அரசுகளுக்கு சுமார் 30 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி வாழ்ந்தவர் வீரப்பன். அதனால்தான் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் என்ற அடைமொழியும் வந்தது.

    Advertisement

    முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!

    வீரப்பனை கண்டுபிடிக்க தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் பல நூறு போலீசார் உயிரிழந்தனர். இரு மாநில அரசுகளும் இணைந்து அதிரடிப்படையை உருவாக்கின. வீரப்பன் கோஷ்டி நடத்திய தாக்குதலில் மொத்தம் 184 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

    2004-ல் சுட்டுக் கொலை

    வீரப்பனுடன் தனித் தமிழ்நாடு கோரிய தமிழ்நாடு விடுதலைப் படை உள்ளிட்டவைகள் கை கோர்த்தன. அப்போதுதான் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட மிகப் பெரிய பதற்றமான சம்பவம் நடந்தது. வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ராஜ்குமார் மீட்கப்பட்டார். 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட அவரது அத்தியாயம் முடிவுக்கு வந்தது. வீரப்பன் சமாதிக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 18-ந் தேதி பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சியினர் சென்று மரியாதை செலுத்துகின்றனர்.

    தமிழ்த் தேசிய இயக்கங்கள்

    அதேநேரத்தில் தமிழக எல்லையில் கர்நாடகா அத்துமீறாமல் தடுத்தவர் வீரப்பன் என்கிற கருத்தையும் தமிழ்த் தேசியம் பேசுவோர் முன்வைக்கின்றனர். அதனால் எல்லைகாத்த மாவீரன் என்றும் வீரப்பனை அவர்கள் அழைத்து வந்தனர். இருந்தபோதும் வீரப்பன் பொதுவெளியில் பகிரங்கமாக கொண்டாடப்பட்டவராக இதுவரை இல்லை. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருக்கிறார்.

    வீரப்பன் நினைவு கொடி கம்பம்

    தற்போது எல்லை காத்த மாவீரன் வீரப்பன் நினைவு கொடிகம்பம் என்ற பெயரில் கல்வெட்டு ஒன்றை சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் அமைத்துள்ளனர். இந்த கல்வெட்டில் பிரபாகரன், வீரப்பன், சீமான் ஆகிய மூவரது உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இன்று இக்கல்வெட்டை சீமான் திறந்து வைத்தார். இது தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்று அம்பத்தூர் தொகுதி - மேனாம்பேட்டில் வனக்காவலன் ஐயா வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கத்தில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூரில் தமிழ்த்தேசியப்போராளி கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் புலிக்கொடியேற்றியபோது. என்ற தலைப்பில் இந்த நிகழ்வின் படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார்

    நாம் தமிழர் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூர் குழந்தை இயேசு ஆலையம் அருகில் தமிழ்த்தேசியப் போராளி வ.கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கல்வெட்டுக்களைத் திறந்து வைத்து, வானளாவ உயர்ந்த கொடிக்கம்பங்களில் புலிக்கொடியேற்றிவைத்தார். உடன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், அம்பத்தூர் தொகுதிச்செயலாளர் க.பூபேசு உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Naam Tamilar Party has hailed sandalwood smuggler Veerappan.