சென்னை: நாகையில் சுமார் 135 கோடி ரூபாய் போதை பொருள் பதுக்கிய வழக்கில் தவெக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேருக்கும் சர்வதேச கடத்தல் கும்பளுடன் தொடர்பு இருக்கிறதா என மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உளவு தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு ஏஜென்சி இந்த மெகா போதை பொருள் வழக்கை கண்டுபிடித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு காவல்துறை, போதை பொருள் ஒழிப்புத் துறை, உளவுத்துறை கண்டுபிடிக்காதது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. மேலும் இலங்கைக்கு போதை பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தமிழக அரசின் கடலோர காவல் படை செயல்பாடு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த பைனான்சியரான சுகன் என்பவர் வீட்டிற்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். சுகன் லாட்ஜ் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட 27 பாக்கெட்டுகளில் மெத்தபட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 135 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 135 கோடி என்கின்றனர் அதிகாரிகள். தொடர்ந்து போதைப்பொருள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணைக்கு பிறகு இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நாகை மாவட்ட தவெக பிரமுகர் வழக்கறிஞருமான பூபாலன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி சுகன் போன்றவர்கள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்கு பல ஆண்டுகளாக போதை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்களிடம் சுமார் 24 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு இவர்கள் போதை பொருள் சப்ளை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது. குறிப்பாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்பட்டு வந்த நிலையில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தொடர்பு இருக்கிறதா? அங்கு யாருக்கு போதை பொருள் கடத்தினார்கள்? பணம் எப்படி கைமாறியது? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது. அதுவும் தமிழ்நாடு காவல்துறையை நோக்கி.. தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தது தவெக. அப்போது போதைப் பொருள் ஒழிப்பு படை என தனியே ஒரு படை உருவாக்கப்பட்டது. தற்போது மத்திய ஏஜென்சியான மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை கண்டுபிடித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு உளவுத்துறையும், காவல்துறையும் என்ன செய்தது? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாகையிலிருந்து அடிக்கடி இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் கடலோர காவல் படை அதிகாரிகள் குறித்த கேள்விகளும் எழுந்திருக்கிறது. குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் செல்போனில் காவலர்களின் செல்போன் எண்களும் இருப்பதும் அவர்களுடன் இருவர்கள் அடிக்கடி பேசி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே காவல்துறையினருக்கும் இந்த கடத்தலில் தொடர் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.சிக்கும் நடிகைகள்? கிலோ கணக்கில் சிக்கிய மெத்..இண்டர்நேசனல் கும்பலுடன் தவெக நிர்வாகிக்கு கனெக்ஷன்?