சென்னை: "சாதிக்க நினைப்பவர்களுக்கு வயது என்பது ஜஸ்ட் நம்பர்தான்" என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் நாகப்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ்குமார்!.. 51 வயதில், எம்பிபிஎஸ் சீட்டை தட்டிப் பறித்து, 20 வயது இளைஞர் பட்டாளத்துடன் காலேஜ் கிளாஸ் ரூமில் போட்டி போடத் ரெடியாகிவிட்டார்.. யார் இந்த சுரேஷ்குமார்? என்ன நடந்தது? சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!
1992-ல் 12ம் வகுப்பை முடித்துவிட்டு, டாக்டராக வேண்டும் என்ற கனவோடு காத்திருந்தார் சுரேஷ்குமார். ஆனால், குடும்ப சூழல் மற்றும் போதிய சான்ஸ்கள் கிடைக்காததால், அந்த ஆசை தள்ளிப்போனது.
நாகர்கோவில் சுரேஷ்குமார் டாக்டராக முடியாவிட்டாலும், டாக்டர் துறைக்கு நெருக்கமாகவாவது இருப்போம் என்று ஃபார்மஸி படிப்பை தேர்ந்தெடுத்தார் சுரேஷ்குமார்.. ஆனாலும் படிக்கும் ஆர்வம் இவருக்கு குறையவேயில்லை. இதனால் அடுத்தடுத்து எம்பிஏ முடித்தார், 2 துறைகளில் முனைவர் பட்டமும் (Two PhDs) பெற்றார்! சென்னையில் உள்ள பிரபல தனியார் நோய் கண்டறிதல் நிறுவனத்தில் (Diagnostics Company) ரத்தப் பரிசோதனை சந்தைப் பிரிவில் (Marketing/Diagnostics) துணைத் தலைவர் (Vice-President) என்ற டாப்-மோஸ்ட் பதவியையும் அலங்கரித்தார். கைநிறைய சம்பளம், கவுரவமான பதவிகள் என எல்லாமே இருந்தது. ஆனாலும் சுரேஷ்குமாருக்கு மனதின் ஏதோ ஒரு மூலையில், அந்த டாக்டர் ஒட்டிக்கொண்டேயிருந்தது.. ஸ்டெதாஸ்கோப்பும், "டாக்டர்" பட்டமும் அவரை தூங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. இதனிடையே நீட் தேர்வுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது இவருக்குள் முதல் பொறியை தட்டியது. கடந்த 2022ம் ஆண்டு தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிப் பார்த்தார்... ஆனால், அந்த முயற்சியில் அவரால் ஜெயிக்க முடியவில்லை. எனினும் சுரேஷ்குமார் சோர்ந்து போகவில்லை! கடந்த 2025ம் ஆண்டு, மருத்துவப் படிப்பு கலந்தாய்வின்போது, "தாயும் மகளும் சேர்ந்து எம்பிபிஎஸ் சீட் பெற்றார்கள்" என்ற செய்தி மீடியாக்களில் வந்ததை பார்த்ததுமே, "அவர்களாலேயே முடியும் போது நம்மால் முடியாதா?" என்ற வீரியம் சுரேஷ்குமாருக்குள் தொற்றிக்கொண்டது! அதற்கு பிறகு, பகலில் கம்பெனி வேலை, இரவில் கண் விழித்துப் படிப்பு என்று மும்முரமானார்.. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள, தனது மகனுக்கே பாடம் சொல்லித் தந்துள்ளார்.. இவரது மனைவி துர்காவும் கொடுத்த ஊக்கமும் ஆலோசனைகளும் இவரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தின. முதன்முறை தமிழில் எழுதித் தோற்றதால், இந்த முறை ஆங்கில வழியில் பயிற்சி எடுத்தார். கடந்த 2019ம் ஆண்டு சுரேஷ்குமாருக்கு ஒரு விபத்து நேரிட்டது. அதில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றிருந்தார். இந்நிலையில்தான், 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுதிய சுரேஷ்குமார், அதில் 192 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்! நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். கலந்தாய்வில் கலந்துகொண்ட அதிகாரிகள் முதல் சக மாணவர்கள் வரை அனைவரும் 51 வயது நபரைப் பார்த்து வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். தன்னுடைய மதிப்பெண் மற்றும் மாற்றுத்திறனாளி சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே (Government Medical College, Nagapattinam) எம்பிபிஎஸ் சீட்டைத் தட்டிப் பறித்தார் சுரேஷ்குமார்! சொந்த ஊரிலேயே காலேஜ் கிடைத்ததில் சுரேஷ்குமாருக்கு செம ஹேப்பி.. எம்பிபிஎஸ் படிப்பை முழுநேரமாகப் படிக்க வேண்டும் என்பதற்காக, இதுவரை பார்த்து வந்த துணைத் தலைவர் வேலையை அப்படியே உதறித் தள்ளிவிட்டுப் படிப்பில் இறங்கியுள்ளார்! இதுகுறித்து சுரேஷ்குமார் சொல்லும்போது, "சொந்த ஊரிலேயே கல்லூரி அமைந்திருப்பதால், எனது 72 வயது அம்மாவுடன் தங்கி, தினமும் சைக்கிளிலேயே காலேஜூக்கு போக போகிறேன்..20 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுடன் உட்கார்ந்து என்னால் இயல்பாகவும் சுறுசுறுப்பாகவும் படிக்க முடியும். நிச்சயம் எம்பிபிஎஸ் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்! அதற்குப் பிறகும் MD/MS படிப்பேன்" என்கிறார் இந்த 51 வயது இளைஞர்! 34 வருட காத்திருப்பு... தடைகளை தகர்த்த விடாமுயற்சி... வேலையை துறந்த வைராக்கியம் என சுரேஷ்குமாரின் இந்த சாதனை, கனவுகளுக்கு ஆயுள் தடையோ, வயது தடையோ கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.. சூப்பர்ல..!சுரேஷ்குமார் கடும் முயற்சி
பகலில் வேலை - இரவில் படிப்பு
2019 விபத்தும், 192 மார்க்கும்
கைநிறைய சம்பளத்தை உதறிய வைராக்கியம்