ஆலோசகர் பணியில் ஜான் ஆரோக்கியசாமி.. அரசாணை வெளியிட விஜய் அஞ்சுவது ஏன்? நயினார் கேட்ட கேள்வி

  • சென்னை: முதல்வர் விஜய்யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் ஆரோக்கியசாமியின் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டால் கூட, தவெக அரசு உண்மைகளை மூடி மறைப்பதாக சாடியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி. விஜய்யின் தேர்தல் வியூக ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி, பல்வேறு வியூகங்களை வகுத்து தவெகவை வெற்றி பெற வைத்தார். அதேபோல் ஜான் ஆரோக்கியசாமியின் பரிந்துரையின் பெயரில் பல்வேறு நபர்களுக்கும் சீட் மற்றும் அமைச்சரவையிலும் கூட இடம் கிடைத்துள்ளது.

    Advertisement

    மானியக் கோரிக்கையின் போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முதல்வர் விஜய்க்கு கூட நன்றி சொல்லாமல், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். நேற்று அமைச்சர்கள் ராஜீவ் மற்றும் லோகேஷ் ஆகியோரும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு நன்றி கூறினர். இதனால் தவெகவின் பவர் செண்டராக இவர்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜான் ஆரோக்கியசாமி முதல்வர் விஜய்யின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்?

    Advertisement

    முதல்வர் விஜய், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது தவெக அரசு.

    இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும். ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி, தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என ஜோசப் விஜய், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.

    அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

    Advertisement

    எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Nainar Nagendran Accuses TVK Govt of Concealing Facts Over John Arokiasamy Appointment as CM Advisor