“நாடாளுமன்றமே ரூ.900 கோடி தான்.. புதிய தலைமை செயலகத்திற்கு ரூ.1,200 கோடியா?” - நயினார் நாகேந்திரன்

  • சென்னை: "புதிய தலைமைச் செயலகத்திற்கு நாடாளுமன்றத்தை விட அதிக அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில்தான் கட்டப்பட்டது. ஆனால் புதிய தலைமைச் செயலகத்திற்கு ரூ.1,200 கோடியா? திட்டமிட்டு மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது தவெக அரசு" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. பொதுமக்களுக்கான திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் பேசப்படவில்லை.

    Advertisement

    திங்கட்கிழமை வருகிறேன் யாரும் ஓடிவிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடி விட்டார் முதலமைச்சர். 100க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள், படுகொலைகள் நடைபெற்றுள்ளது. புகார் அளித்தவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசாக இருக்கிறது.

    காவல்துறை மானியக் கோரிக்கை குறித்தும் எதுவும் பேசவில்லை. மற்றொருபுறம் குதிரை பேரம் நடந்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அவசியமா என மக்கள் கேள்வி கேட்க வேண்டும். தவெகவின் குதிரை பேரத்தால் இடைத்தேர்தல் வந்துள்ளது.

    மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று ராஜினாமா செய்து வேறு கட்சியில் சேர்ந்து உடனடியாக மீண்டும் அவர்களே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்கள. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாஜகவினர் முழு மனதோடு பாடுபடுவோம்." என்றார்.

    Advertisement

    புதிய தலைமைச் செயலகம் அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிட்டார். அன்றைய காலகட்டத்தில் இருந்த மத்திய அமைச்சர்கள் தடையாக இருந்தார்கள்.

    புதிய தலைமைச் செயலகத்திற்கு நாடாளுமன்றத்தை விட அதிக அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது. அதேபோன்று முதல்வர் இல்லம் அமைந்திருக்கும் அருகில் கட்டப்படுவது அவசியம் என்ன? புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் மிகப்பெரிய உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்ட முடியாது. அதைவிட சிறந்த முறையில் கிண்டியில் கட்டினால் பொருத்தமாக இருக்கும்.

    Advertisement

    புதிய கூட்டணி உருவானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "சபாநாயகர் கையில் ஜெப மாலையோடு வருகிறார். இதுவரை எந்த சபாநாயகரும் ஜெபமாலையோடு வந்ததில்லை. பைபிள் வாசகத்தையும் சட்டமன்றத்தில் தெரிவித்தில்லை.

    கிறிஸ்தவ முதலமைச்சர் தான் ஆனால் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமான முதலமைச்சரா என்ற கேள்வி எழுகிறது? மதச்சார்போடு நடந்து கொண்டு மதச்சார்பின்மை என சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வது. கிருஷ்ண ஜெயந்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தது வரவேற்கிறோம் ஆனால் மதச்சார்பற்ற கூட்டணி என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    முதலமைச்சர், நிதி அமைச்சர், சபாநாயகர் சிறுபான்மை அரசு என சொல்லிக்கொண்டு மதச்சார்பற்ற அரசு என சொல்ல வேண்டாம். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என யாருக்கு பிரச்சனை வந்தாலும் பாஜக நிற்கும்." என்றார்.

    Advertisement

    தவெக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குழப்பம் நிலவுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "யார் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ன உயரம் என தெரிந்து கொள்ள வேண்டும். யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். பணம் கொடுத்து குதிரை பேரம் செய்து இருக்கிறீர்கள் என்பது எங்கள் குற்றச்சாட்டு." என்றார்.

    மேலும் பேசிய அவர், "உருவ கேலி செய்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. யாரையும் குறைத்து மதிப்பீட்டு கேலி செய்யும் அவசியம் எனக்கு கிடையாது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முன் வைக்கலாம். ஆனால் வில்லன் போல் சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசி வருகிறார். முதலமைச்சரின் உண்மை முகம் வெளியே தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளர்.

    English Summary

    “The new Parliament building itself was constructed at a cost of ₹900 crore. Yet, is the new Secretariat costing ₹1,200 crore? The TVK government is deliberately paving the way for massive corruption,” criticized BJP State President Nainar Nagendran.