“நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் செங்கோட்டையன் பதவி விலகத் தயாரா?” - நயினார் நாகேந்திரன் சவால்

  • சென்னை: "நான் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளதை அமைச்சர் செங்கோட்டையன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாரா, அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவாரா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "1991ஆம் ஆண்டிலிருந்து செங்கோட்டையனை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். அவர் எப்போதுமே, தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனையில் தலையை விட்டு மாட்டிக்கொள்வார்.

    Advertisement

    நான் மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்ததால் திமுகவிடம் சமரசமாக போனதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டுகிறார். மருத்துவ கல்லூரி தொடங்க விண்ணப்பித்திருந்தேன் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். அண்ணன் செங்கோட்டையன் அமைச்சர் பதவியை விடுவதற்கு தயாரா? அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது." என்றார்.

    மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், "கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஒரு காலத்தில் நேர்மையாக இருந்தார்கள், தற்போது சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டனர். தினமும் சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து பேசி மகிழும் முதல்வர் விஜய்க்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா? அல்லது மனமில்லையா? கரூரை கைகழுவி விட்டதுபோல அம்மோனியா வாயு உயிரிழப்பு சம்பவத்தையும் புறக்கணிக்கிறீர்களா விஜய் அவர்களே?" எனக் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    முன்னதாக, பாஜகவிடம் ஆட்சி அமைக்க விடுங்கள் என தவெக தரப்பில் கேட்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகின்றவர், அவருக்கு பதில் சொல்ல முடியாது. அவர் எங்களை தாக்குகின்றாரே ஒழிய, திமுக பாஜகவை தாக்கி கொண்டு இருக்கிறது.

    அங்கு சமரச முயற்சி செய்து விட்டு, மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்காக தி.மு.க-விடம் விண்ணப்பம் போட்டவர் அவர். இதை பேசுவது அழகாக இருக்காது. பாஜகவிடம் நாங்கள் என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது. ஆட்சி அமைத்ததற்கு பிறகு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்பதற்காக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரையும் பார்ப்பது இயற்கையான ஒன்று" எனக் கூறியிருந்தார்.

    English Summary

    BJP State President Nainar Nagendran has challenged Minister Sengottaiyan, asking if he is prepared to quit politics if he can prove that Nagendran applied to medical college, and conversely, whether Sengottaiyan would resign from his ministerial post if he fails to prove it.