தவெகவில் ஆகப்பெரும் அரசியல் ஆச்சரியக்குறி ஆதவ் அர்ஜுனா தான்” - நயினார் நாகேந்திரன் அட்டாக்!

  • சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது அவரையே விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை கிண்டல் செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

    Advertisement

    மதுராந்தகத்தில் நடந்த பிரச்சாரத்தில் ஆதவ் அர்ஜுனா கூறியது போல, கடந்த 5 வருடங்களாக மதுராந்தகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமதி. மரகதம் குமரவேல் தனது தொகுதிக்காக எதையும் செய்யவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தவெக அமைச்சர்கள் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பிரச்சாரம் செய்தார்.

    தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு சேம் சைடு கோல் அடித்தார் ஆதவ் அர்ஜுனா. "மதுராந்தகத்தில் சாலை வசதியே இல்லை, ஆனால் இங்கு சாலை போடப்பட்டதாகக் கணக்கு இருக்கிறது, ஆனால் சாலைப் போடப்படவில்லை, மின்சார வசதியே இல்லை, ஆனால், மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. பாருங்கள் இங்கு குடிசை வீடு இருக்கிறது. இந்த நிலை மாற்றப்படும்" என்று பேசினார் ஆதவ் ஆர்ஜுனா.

    Advertisement

    கடந்த ஐந்து ஆண்டு காலமாக, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்தான் மதுராந்தகம் எம்எல்ஏவாக இருந்தார். அதை மறந்துவிட்டு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் முறைகேடு நடந்ததாக, மரகதம் குமரவேலை வைத்துக் கொண்டே பேசியிருக்கிறாரே என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

    இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அதையே தான் நாங்களும் சொல்கிறோம் ஆதவ் அர்ஜுனா அவர்களே! மதுராந்தகத்தில் நடந்த பிரச்சாரத்தில் நீங்கள் கூறியது போல, கடந்த 5 வருடங்களாக மதுராந்தகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேல், தனது தொகுதிக்காக எதையும் செய்யவில்லை.

    Advertisement

    ரோடு போட்டதாக கணக்கு காட்டியுள்ளார், ஆனால் ரோடு இல்லை. தண்ணீர் வசதி செய்து கொடுத்ததாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால் தண்ணீர் வரவில்லை. மின் இணைப்புகள் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார் ஆனால் கரண்ட் வேறு எங்கோ சென்று விட்டது. ஆக, நியாயப்படி பார்த்தால் பட்டவர்த்தனமாக இத்தனை ஊழல் செய்த மரகதம் குமரவேல் அவர்கள் மீது, உங்கள் அரசு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    கடந்த 5 வருடங்களில் மதுராந்தகம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 15 கோடி (ஆண்டுக்கு ரூ.3 கோடி வீதம்) என்ன ஆனது என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த 5 வருடங்களில் அவர் தொகுதியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Advertisement

    ஆனால், நீங்களோ மரகதம் குமரவேல் அவர்களை ஊர்வலமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது தெரிகிறதா உங்கள் கட்சியிலேயே ஆகப்பெரும் அரசியல் ஆச்சரியக்குறி நீங்கள் தான் என்று!

    எது எப்படியோ மக்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், MLA பதவியில் இருந்த 5 வருடங்களில் தனது தொகுதிக்கு எதுவும் செய்யாமல், மீண்டும் தன்னை நம்பி வாக்களித்த மக்களை உதாசீனப்படுத்துவது போல தனது MLA பதவியை ராஜினாமா செய்தவர் தான், மரகதம் குமரவேல். அப்படிப்பட்டவரை மீண்டும் தேர்ந்தெடுத்தால் மட்டும் அவர் மக்களுக்கு இனி என்ன நல்லது செய்துவிடப் போகிறார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    BJP State President Nainar Nagendran has mocked Aadhav Arjuna for criticizing TVK candidate Maragatham Kumaravel while campaigning in her support for the Maduranthakam by-election.