சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் பெயராக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாறியுள்ளார். அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறாரா? அல்லது பாஜகவிலேயே முக்கிய பொறுப்பு பெறப்போகிறாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. இந்த சூழலில்தான் அண்ணாமலையின் டெல்லி பயணம் கூடுதல் பரபரப்பை ஏற்பௌத்தியுள்ளது. இந்நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக மிக முக்கிய முகமாக இருந்தவர் அண்ணாமலை. காவல் துறை அதிகாரி பணியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார்.
அவரது நேரடி பேச்சு, அதிரடி அரசியல் அணுகுமுறை, சமூக வலைதளங்களில் செயல்பாடு உள்ளிட்டவை காரணமாக இளைஞர்கள் மத்தியில் தனித்த செல்வாக்கை உருவாக்கியிருந்தார். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில், பாஜக அதிகமாக பேசப்படும் கட்சிகளில் ஒன்றாக மாறியது.
"என் மண் என் மக்கள்" நடைபயணம், திமுக அரசுக்கு எதிரான தொடர் விமர்சனங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எழுப்பிய கேள்விகள் ஆகியவை அவரை மாநில அளவிலான முக்கிய அரசியல் தலைவராக முன்னிறுத்தின. ஆனால், அண்ணாமலை மற்றும் அதிமுக தலைமை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கூட்டணி அரசியலில் சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த அரசியல் மாற்றங்களின் பின்னணியில், மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலகினார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். தலைமை மாற்றத்துக்குப் பிறகு அண்ணாமலைக்கு தேசிய அளவிலோ, மத்திய அரசிலோ முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஓராண்டுக்கும் மேலாகியும் எந்த புதிய பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை. இதுவே அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக, கடந்த தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் அண்ணாமலை நேரடியாக போட்டியிடாததும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே பங்கேற்ற அவர், போட்டியிடும் வாய்ப்பை தவிர்த்தது குறித்து அப்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதன் பின்னர் கட்சிக்குள் அவரது பங்கு என்ன என்பது குறித்த கேள்விகளும் அதிகரித்தன. அண்ணாமலை சமீபத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக வெளியிட்ட கருத்துகளும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகின. பாஜக தேசிய நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறுபட்ட பார்வையை அவர் வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.இதன் பின்னரே, அவர் தனி அரசியல் பாதையை தேர்வு செய்யத் திட்டமிட்டு வருகிறார் என்ற தகவல்கள் தீவிரமாக பரவத் தொடங்கின. அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, அண்ணாமலை உடனடியாக புதிய கட்சியை அறிவிப்பதை விட, முதற்கட்டமாக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் நடத்தி வரும் "வி தி லீடர்ஸ்" என்ற சமூக அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது அல்லது புதிய பெயரில் தனி இயக்கம் தொடங்குவது போன்ற யோசனைகளும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஆன்மிக ஆலோசனைகளை பெறுவது அண்ணாமலையின் வழக்கமாக கருதப்படுகிறது. அண்மையில் அவர் நேபாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா? மீண்டும் தமிழக அரசியலில் முக்கிய பங்கு கொடுக்கப்படுமா? அல்லது தனி அரசியல் பயணம் குறித்து அவர் தனது முடிவை தெரிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போதைய 20206 தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் தான் அதே பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அதற்குத் தேசியத் தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி கிடைப்பது சந்தேகமாக மாறியுள்ளது. அதனால் தான் தற்போது அண்ணாமலை போர்க் கொடி தூக்கியுள்ளார் என்கின்றனர்.அண்ணாமலை
நயினார் நாகேந்திரன்
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி
டெல்லி பாஜக
வீ தி லீடர்ஸ்
நேபாளம் பயணம்
அண்ணாமலை டெல்லி பயணம்
என்ன காரணம்?