தயாரிப்பாளர் டெல்லி பிரதிநிதி.. கதாநாயகன் முதலமைச்சரா.. என்னங்க நடக்குது.. கொந்தளித்த நயினார்

  • தூத்துக்குடி: தவெக ஆட்சியை பிடித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட, அறிவிக்கப்படாத சர்ச்சைகள் அதிகம் தான் வட்டமடிக்கிறது. சட்டமன்றத்தின் மாண்பை சிதைப்பது, அமைச்சர் போதை வீடியோ சர்ச்சை, உதவியாளருக்கு அரசு பதவி என்கிற வரிசையில் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்துள்ள நயினார் நாகேந்திரன் தயாரிப்பாளர் டெல்லி பிரதிநிதி, கதாநாயகன் முதலமைச்சரா என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவர் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர். ஜனநாயகன் படத்தின் கதாநாயகன் தான் முதலமைச்சர். வெங்கட நாராயணா ரியல் எஸ்டேட் நிறுவன அதிபராவார். கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

    Advertisement

    டெல்லி சிறப்பு பிரதிநிதி

    அவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம். இது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஏற்கனவே மேகதாது, காவிரி, தென்பெண்ணையாறு பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் டெல்லி பிரதிநிதியாக இருந்தால் எப்படி நீதி கிடைக்கும். இதை பாஜக சார்பில் கண்டிக்கிறோம். நேற்று மட்டுமே தவெகவின் நிர்வாகிகள் 4 பேர் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வேறு எந்த கட்சி நிர்வாகியும் இதை செய்யவில்லை.

    ஆட்சியில் இருப்பதால் காவல்துறை அவர்களை கைது செய்ய முடியாது என்கிற மமதையில் இப்படி செய்கிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. பழைய திமுக ஆட்சியில் கற்பழிப்பு, பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததோ, கஞ்சா போதை நடமாட்டம் அதிகமாக இருந்ததோ, அதேபோல இப்போதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகம் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மக்கள் வருங்காலத்தில் என்ன தீர்ப்பு சொல்வார்கள் என தெரியவில்லை.

    Advertisement

    சினிமா கிடையாது

    முதலமைச்சர் சட்டமன்றத்தில் கையை வீசி நான் சோலியை முடித்துவிடுவேன் என்பது போல சைகை செய்வதை பாஜக கண்டனம் தெரிவிக்கிறது. முதலமைச்சர் இப்படி சொல்வதை எப்படி ஏற்க முடியும். வளர்ச்சிக்காக ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். தமிழக முதலமைச்சருக்கு மக்களை பற்றிய கவலை இல்லை. மாரத்தானில் ஓடினால் போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது. காவல்துறையை செயல்பட வைத்தால் தான் ஒழிக்க முடியும். சினிமாவை போல ஸ்டுடியோவில் ஓடி, சூட்டிங் செய்தால் மாறாது"

    English Summary

    Nainar nagendran: Jananayagan movie producer Venkat Narayana appointed as Delhi Special Representative. Nainar Nagendran condemns TVK government on this issue.