சென்னை: தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை கைகழுவி விட நினைக்கிறதா தவெக அரசு? எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காவிரி தொழில்நுட்பக் குழுவில் காலியாக உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டுமென முதல்வர் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவி கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக இருப்பதாகவும், தகுதியான மூத்த தலைமைப் பொறியாளர்களில் ஒருவரை அப்பதவியில் நியமிப்பதற்காக அரசாணை வெளியாகி 17 நாட்கள் கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வெளியாகியுள்ள தகவல் தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அறிவுறுத்தியும் கூட, கர்நாடக காங்கிரஸ் தண்ணீர் தர மறுக்கிறது. மேலும், தமிழகத்தின் நீராதாரத்தை கெடுக்கும் வகையில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கிறது. அதுமட்டுமன்றி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு பல்வேறு பிரச்சினைகளுடன் இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில், காவிரி நதிநீர் குறித்து தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்கும் காவிரி தொழில்நுட்பக் குழுவினை அதிகாரிகள் இன்றி இப்படி அரைகுறையாக இயக்குவது ஏற்புடையதல்ல. மாநிலத்தின் நீர் மேலாண்மையையும், பாசனத் தேவையையும் கண்காணிக்கக் கூடிய இக்குழு, அதிகாரிகள் இன்றி பலவீனமடைந்தால், தமிழகத்தின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும். எனவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (CWRC) ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டங்களில் தமிழகத்தின் குரலாக ஒலிக்கக் கூடிய காவிரி தொழில்நுட்பக் குழுவில் காலியாக உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டுமென முதல்வர் திரு. விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்." எனக் கூறியுள்ளார்.தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் கிடைத்த மாதிரிதான் போங்க! G.O போட்டும் முக்கிய பொறுப்புக்கு ஆள் போடல!