சென்னை: தொடர் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாமல், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர்கள் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
பிரதமர் மோடியின் தந்தையை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கார்கேவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மக்களால் அடித்து விரட்டப்படும் காங்கிரஸ் கட்சி, தனது ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் எங்கள் தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அநாகரிக அரசியலின் உச்சம். அதிலும் காங்கிரஸ் கட்சியிலேயே வயதில் மிகவும் மூத்தவரான மல்லிகார்ஜுன் கார்கே, நாட்டு பிரதமரின் குடும்பத்தார் மீது இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது அக்கட்சியின் வளர்ப்பைத் தான் காட்டுகிறது. மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடியை, தேநீர் விற்றவர் என்றார்கள், குடும்பம் இல்லாதவர் என்றார்கள், தாயை பழித்தார்கள் இன்று அவரது தந்தையையும் இகழ்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் "மோடியின் குடும்பம்" என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது போல. இந்த கீழ்த்தரமான அரசியலுக்காகத் தான் மக்கள் காங்கிரஸை வெறுக்கிறார்கள் என்பது இன்னும் கூட புரியவில்லை போல. எனவே, நமது பாரதப் பிரதமர் குறித்து நாவடக்கம் இன்றிப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்பதை மீண்டுமொரு முறை வலியுறுத்துகிறேன். இல்லையேல் தமிழ்நாடு பாஜக சார்பாக மாநிலம் முழுவதிலும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாகவே விடுக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.