சென்னை: தமிழ்நாடு மின்சாரத் துறை என்பதற்குப் பதிலாக 'மின்தடை மற்றும் மெழுகுவர்த்தித் துறை' என மாற்றிவிடலாம் என மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்குத்தான் தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அவர்களின் லட்சணம் இருக்கிறது எனவும், ஆன்மிகத் தலங்களின் கண்ணியத்தையும் தலைவர்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கியுள்ள தவெக அரசும், மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் மின்தடைச் சம்பவங்கள், திரு. விஜய் தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை முற்றிலும் செயலிழந்து, தமிழகத்தை இருண்ட காலத்திற்குத் தள்ளிவிட்டதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
நேற்று முன்தினம் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தபோது ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, நேற்று இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் மாண்புமிகு திரு. சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அடுத்தடுத்து இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது உச்சக்கட்டப் பாதுகாப்பு அவலமாகும். உலகப் புகழ்பெற்ற ஒரு புண்ணியத் தலத்தில், மிக முக்கியத் தலைவர்களின் வருகையின்போதே தடையில்லா மின்சாரத்தை வழங்கத் திறனற்ற திரு. ஜோசப் விஜய் அரசு, சாமானிய மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறது? தமிழ்நாடு மின்சாரத் துறை என்பதற்குப் பதிலாக 'மின்தடை மற்றும் மெழுகுவர்த்தித் துறை' என மாற்றிவிடலாம் என மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்குத்தான் தவெக அமைச்சர் திரு. சிடிஆர் நிர்மல்குமார் அவர்களின் லட்சணம் இருக்கிறது. சமீபத்தில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் நிலவிய வெளிப்படைத்தன்மையற்ற போக்கு, கொள்முதல் குளறுபடிகள் மற்றும் நிர்வாகத் தோல்வியே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்தடை தலைவிரித்தாடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உடனடியாக அதிநவீன தானியங்கி ஜெனரேட்டர் (Automatic Power Backup) வசதிகளை அமைப்பதோடு, இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆன்மிகத் தலங்களின் கண்ணியத்தையும் தலைவர்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கியுள்ள தவெக அரசும், மின்துறை அமைச்சர் திரு. நிர்மல்குமாரும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.