நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. மத்திய அமைச்சரவையில் நடக்கும் மாற்றம்.. பின்னணி என்ன?

  • சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜக மேலிடம் அழைப்பு விடுத்ததன் பெயரில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணித்துள்ள சூழலில், இன்று மாலை வானதி சீனிவாசனும் டெல்லி புறப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள சூழலில், நயினார் நாகேந்திரன் அமைச்சரவையில் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    3 நாட்களுக்கு முன்பாக பாஜகவில் தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களின் தேர்தலை கணக்கில் கொண்டு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தேசிய மகளிர் அணிச் செயலாளராக இருந்த வானதி சீனிவாசன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் வானதி சீனிவாசன் எந்தப் பதவியும் இல்லாமல் பாஜகவில் இருந்து வருகிறார்.

    Advertisement

    இப்படியான சூழலில் திடீரென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி பயணித்திருக்கிறார். நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த சூழலில், அடுத்த நாளிலேயே நயினார் நாகேந்திரன் டெல்லி செல்வதற்கு என்ன காரணம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    அதுமட்டுமல்லாமல் இன்று மாலையே வானதி சீனிவாசனும் டெல்லிக்கு பயணிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தமிழக பாஜகவின் இரு முக்கிய நிர்வாகிகளும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பின் பெயரில் டெல்லி செல்கின்றனர். கடந்த 2 மாதங்களாகவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பெரியளவில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

    Advertisement

    அண்மையில் மாணவர்களின் போராட்டம் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரணமாக கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இடத்திற்கு நயினார் நாகேந்திரன் சேர்க்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    அதேபோல் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நீண்ட ஆண்டுகளாகவே வானதி சீனிவாசன் முயற்சித்து வந்தார். அந்த பதவிக்கு வானதி சீனிவாசனுடன் பேச டெல்லி தலைமை அழைத்திருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக பாஜகவில் மீண்டும் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Nainar Nagendran: TN BJP Leader Nainar Nagendran Called to Delhi Ahead of Expected Union Cabinet Reshuffle