நயினார் நாகேந்திரனை சுற்றியுள்ள வளையம் இறுகுகிறதா? யார் அந்த 4 விஐபி? டெல்லி மாஸ்டர் பிளான்

  • சென்னை: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, தமிழக பாஜகவுக்குள் மாநில தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இப்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. அப்படியானால் அடுத்த புதிய தலைவர் யார்? இப்போதுள்ள தலைவரை மாற்றினால் அவருக்கு ஏதாவது பதவி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    சட்டசபை தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், கமலாலயத்தின் உள்விவகாரங்கள் டெல்லி வரை ஒலிக்க தொடங்கியுள்ளதாம்.. இப்போதுள்ள தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு டெல்லியில் மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்ற தகவல் சமீப நாட்களாகவே பரவி வருகிறது.

    Advertisement

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

    அதேசமயம், டாப் லெவல் தலைவர் பதவிக்கு போட்டா போட்டியும் கட்சிக்குள் தொடங்கிவிட்டதாம்.. ராம சீனிவாசன், அர்ஜுன மூர்த்தி, ஏ.பி.முருகானந்தம், வினோஜ் செல்வம் என ஒரு பெரிய பட்டாளமே ரேஸில் குதித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன..

    புதிய தலைவர், புதிய அமைப்பு செயலர் என மொத்தமாக மாற்றங்களை செய்ய தேசிய தலைமை திட்டமிட்டிருந்த நேரத்தில்தான், அண்ணாமலையின் "இது நம்ம இயக்கம்" என்ட்ரி ஒட்டுமொத்த பொலிட்டிக்கல் பிளானையும் மாற்றியமைத்தது.

    முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை

    கட்சியை விட்டு வெளியேறிய அண்ணாமலை தனிப் பாதை காட்டியதும், பாஜகவில் ஏற்கனவே உள்ள அதிருப்தி கோஷ்டி அந்தப் பக்கம் நகருமோ என்ற பயம் மேலிடத்திற்கு வந்தது. உடனே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நயினாரை மாற்றினால், அது அண்ணாமலைக்கு சாதகமாகிவிடும் என நினைத்து தற்காலிகமாக மாற்றத்தை கடந்த மாதம் ஒத்திவைத்தது தேசிய தலைமை.

    Advertisement

    இந்த கேப்பில், தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள நினைத்த நயினார் நாகேந்திரன், மாநில நிர்வாகத்தில் தனக்கு வேண்டிய புதிய முகங்களை கொண்டு வர ஆலோசனைகளையும் நடத்தினார். ஆனால், அடிமட்ட நிலவரம் டெல்லிக்கு இன்னும் நெருக்கடியைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


    டாப் பதவிக்கு போட்டோ போட்டி

    காரணம், ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். இதனால் காலியாகும் இடங்களையும், மாநிலப் பதவிகளையும் பிடிக்க உட்கட்சிக்குள் இப்போது மல்லுக்கட்டே நடக்கிறது.

    இதில் ட்விஸ்ட் என்னவென்றால், "கேட்கும் பதவி கிடைக்காவிட்டால் நாங்களும் அண்ணாமலை பக்கமே போய்விடுகிறோம்" என பல நிர்வாகிகள் ஓப்பனாகவே பிளாக்மெயில் செய்யும் தொனியில் காய் நகர்த்தி வருவதுதான். தேர்தல் வேலைகளை சரியாக பார்க்காத மாவட்ட, மாநில பொறுப்பாளர்களை தூக்க வேண்டும், அதே சமயம் அண்ணாமலை பின்னால் ஆட்கள் போவதையும் தடுக்க வேண்டும் என சீனியர்கள் அடுத்தடுத்து ரகசிய கூட்டங்களை கூட்டி பேசி வருகிறார்களாம்.

    Advertisement

    கையை பிசையும் பாஜக மேலிடம்

    நிலைமை இப்படி இருக்க, நயினார் நாகேந்திரனின் பதவி மாற்றம் குறித்த முணுமுணுப்புகள் மீண்டும் பலமாக கேட்கத் தொடங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் வெடித்திருப்பதுதான்.

    தன் கட்சியின் மாநில செயலரையும், முக்கிய நிர்வாகிகளையும் நயினார் நாகேந்திரன் தன் பக்கம் இழுத்துக் கொண்டதால் டென்ஷனான திருமாறன், "தமிழக பா.ஜ.க தலைமை ஒரு சிண்டிகேட் போல செயல்படுகிறது. நயினாரையும் அவரோடு இருப்பவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பதை டெல்லிதான் யோசிக்க வேண்டும்" என ஓப்பனாக அறிக்கை விட்டுள்ளார்.

    Advertisement

    உட்கட்சி சலசலப்பு, அண்ணாமலையின் மறைமுக அழுத்தம், இப்போது கூட்டணிக் கட்சியின் மிரட்டல் என நயினார் நாகேந்திரனை சுற்றியுள்ள வளையம் நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே போகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Tamil Nadu BJP Chief Nainar Nagendran to Be Replaced? Report Sent to Delhi; Who Is Next?