CM விஜய் குறித்து அவதூறு.. நக்கீரன் கோபால் மீது பாய்ந்த வழக்கு! பேச்சுரிமைக்கு சவால்.. TNDJU கண்டனம்

  • சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக யூட்யூப் சேனலில் அவதூறாக பேசியதாக பிரபல பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நக்கீரன் கோபால் மீது உள்நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்ததை கண்டிப்பதாகவும், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணியை மேற்கொள்ளும் சூழ்நிலை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிஸ்ட் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பத்திரிக்கை ஆசிரியரான நக்கீரன் கோபால் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

    Advertisement

    அந்த பேட்டியில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் கரூர் சம்பவத்தை ஜனநாயகன் திரைப்படத்தில் பயன்படுத்த விஜய் திட்டமிட்டு இருந்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை அதில் பேசியிருந்தார்.

    நக்கீரன் கோபால்

    இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நக்கீரன் கோபால் பேசியதாக சென்னை காவல் துறையில் சம்பத்குமார் என்பவர் புகார் செய்தார். புகார் தொடர்பாக தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்ததற்கு தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    வழக்கு பதிவு

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்," நக்கீரன் கோபால் அவர்கள் மீது 03 ஆகஸ்ட் 2026 அன்று சென்னை தெற்கு -சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் BNS 352, 353(1)(b) & 196 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. 02-08-2026 அன்று யூடியூப் சேனலில் வெளியான நேர்காணல் ஒன்றில், நக்கீரன் கோபால் தமிழ்நாடு அரசியல் மற்றும் அரசு நடவடிக்கைகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகளை "பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது, மின்னனு ஊடக வழியாக அரசுக்கு எதிராகக் குற்றம்புரிய மக்களைத் தூண்டுவது, மதம் இனம் மொழி குறித்துப் பேசி பல்வ்டெறு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்படுத்தல்" என்று சித்தரித்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய்

    இவ்வழக்கை பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கையும் இதனை அனுமதித்த தமிழ்நாடு அரசின் போக்கையும் TNDJU கண்டிக்கிறது. ஒரு பத்திரிகையாளர் கருத்துகளைப் பகிர்வதையே குற்றமாக்கும் முயற்சி அராஜகமானது. குறிப்பிட்ட கரூர் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகளை முதலமைச்சர் விஜய் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

    பேச்சுரிமை

    கருர் விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த அமர்வு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் அவர்கள், "பேச்சுரிமையின் மீது நாங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஒருவரின் பேச்சுக்கு உங்கள் பேச்சின் மூலமே நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்." என்று தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்படாத ஒருவர் பேசுவதை தடுக்க முடியாது என்றும் உத்தரவிட்டனர்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு

    நாடறிந்த புலனாய்வு 'நக்கீரன்' இதழின் ஆசிரியரான நக்கீரன் கோபால் அவர்கள் மீது, கருத்துரிமைக்கும் சுதந்திரமான ஊடகச் செயல்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் நோக்கோடு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கை உடனடியாக ரத்து செய்ய தமிழ்நாடு அரசாங்கத்தை TNDJU வலியுறுத்துகிறது. ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தங்கள் பணியை மேற்கொள்ளும் சூழலை உறுதி செய்யுமாறும், FIRகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Cyber Crime Police register a case against Nakkheeran Gopal over alleged remarks on CM Vijay as TNDJU condemns the FIR.