பெயர்களை அழிக்கலாம்.. ஆனால் வரலாற்றை தொடக்கூட முடியாது.. தவெக அரசுக்கு அன்பில் மகேஷ் வார்னிங்!

  • சென்னை: பெயர்களை அழிக்கலாம்.. ஆனால் வரலாற்றைத் தொடக்கூட முடியாது.. மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம் என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது தவெக அரசு. தமிழ்நாடு திறன் மேம்பாடு திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் தொடர்பாக இணையதளத்தில் இருந்த முந்தைய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள பதிவில், "பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றைத் தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றைத் துளிக்கூட மாற்ற முடியாது!

    திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. "நான் முதல்வன்" திட்டத்திற்கான பெயராக சுமார் ஐந்து விருப்பங்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் "நான் முதல்வன்" என்ற பெயர் இடம்பெறவில்லை. முழுத் திட்ட வடிவமைப்பையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர், "ஒவ்வொரு மாணவரும், இளைஞரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதனால், 'முதல்வன்' என்ற சொல் இடம்பெறும் வகையில் 'நான் முதல்வன்' என்று பெயரிட்டால் என்ன?" என்று பரிந்துரைத்தார். அப்பெயர் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் தலைநிமிர வைத்தது.

    Advertisement

    இந்த உணர்வுகள் எல்லாம் "முதலமைச்சர்தான் ஆக வேண்டும்" எனும் அஜெண்டாவோடு மட்டுமே வந்தவர்களுக்கு தெரியப் போவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் உணரப் போவதில்லை! அதேபோல், "புதுமைப்பெண் திட்டம்" என்ற பெயரை ஒரு கல்லூரி நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வாக்களித்துச் சூட்டியவர்கள் மாணவிகள்!

    வரலாறாக நிலைத்து நிற்கப்போகும் #DravidianModel அரசின் சாதனைத் திட்டங்களின் பெயர்களை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய ஆட்சியாளர்கள் "நான் முதல்வன்" திட்டத்தைப்போல இன்னும் பல திட்டங்களுக்கு பெயர்களை நிச்சயம் மாற்றுவார்கள். அதற்கு காரணமாக "மக்களுக்கு புரியவில்லை" என்கிற ரீதியில் மட்டம் தட்டிப்பேசும் கதைகளையும் கூட அருமையாக அவிழ்த்துவிடுவார்கள். நாமும் நம்புவதற்கு தயாராக இருப்போம். ஆனால், மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "Names can be erased, but history cannot even be touched. If there is any move to stop schemes for students, we are prepared to oppose it democratically," stated former DMK Minister Anbil Mahesh Poyyamozhi as reply to TVK.