அதிருப்தியில் தான் இருக்கேன்.. அந்த பதிவுக்கு காரணம் என்ன? நேரடியாக பதில் சொன்ன நாஞ்சில் சம்பத்

  • சென்னை: தவெகவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத், அதிருப்தியில் இருப்பதால் தான் சோசியல் மீடியாவில் பதிவு போட்டதாக கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் நாஞ்சித் சம்பத். விஜய்யை நேரடியாக சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினார். இதன்பின் தவெகவில் நாஞ்சில் சம்பத்திற்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சட்டசபைத் தேர்தலின் போது நாஞ்சில் சம்பத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

    Advertisement

    அதேபோல் நாஞ்சில் சம்பத் இணைந்த பின் தமிழ்நாடு முழுவதும் தவெகவில் பேச்சாளர்களை தயார் செய்யும் வகையில் பயன்படுத்த உள்ளதாக கூறினர். ஆனால் திடீரென இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட நாஞ்சில் சம்பத் அழைக்கப்படவில்லை. தவெக சார்பாக அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் பட்டியலில் கூட நாஞ்சில் சம்பத் பெயர் இடம்பெறவில்லை.

    இப்படியான சூழலில் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார். நாஞ்சில் சம்பத்தின் பதிவு தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    நாஞ்சில் சம்பத் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனாலும் சிலர் தவெக கூட்டணியில் மதிமுக இணைந்ததால், அவர் இப்படி பதிவிட்டதாக கூறினர். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் நேரடியாகவே அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் பேசுகையில், அதிருப்தியில் இருப்பதால் தான் அந்த பதிவு போட்டேன்.

    இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு யாரும் என்னை அழைக்கவில்லை.. நானும் போகவில்லை.. கட்சியில் இருக்கும் ஒரே பேச்சாளர் நான் தான். அது ஊருக்கே தெரியும் போது, தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா என்று தெரிவித்துள்ளார். தவெகவுக்கு ஆதரவாக வைகோ பேசத் தொடங்கிய போதே, வைகோவுடன் மேடையேற மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறி இருந்தார்.

    Advertisement

    தற்போது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. இதனால் வைகோ மற்றும் துரை வைகோ கேட்டு கொண்டதன் பெயரில் நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவிலும், இடைத்தேர்தலிலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தவெகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    Nanjil Sampath: Nanjil Sampath Signals Displeasure, Says He Was Ignored for Bypoll Campaign