நத்தம் புறம்போக்கு நில விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் திருப்பம்? பட்டா இடிக்கு விடிவு வருமா?

  • சென்னை: தமிழகத்தில் பல தலைமுறைகளாக கிராம நத்தம் நிலங்களில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு, தங்களது சொந்த வீட்டிற்கான பட்டா கிடைக்குமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியும், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் தற்போது எழுந்துள்ளன. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு குறிப்பிட்ட அரசாணையால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லி, பொதுமக்கள் இப்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய அரசிடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது என்ன கோரிக்கை தெரியுமா?

    Advertisement

    இந்த சம்பவத்தின் பின்னணியை சற்று திரும்பி பார்ப்போம்.. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்பு "நத்தம் நிலம்" என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தது வழக்கம். இந்த நிலங்கள் அனைத்தும் அந்தந்த கிராமத்திற்கே சொந்தமான பொதுவான நிலங்களாகவே கருதப்பட்டன.

    Advertisement

    நிலங்களுக்கு பட்டா எங்கே

    இதனால் கிராமத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் மற்றும் கிராமத்தின் பொதுவான விஷயங்களுக்கும் இந்த நத்தம் நிலங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

    இதனிடையே கடந்த 1988ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் இந்த நத்தம் நிலங்கள் குறித்த ஒரு விரிவான கணக்கெடுப்பு பணி மிக தீவிரமாக நடைபெற்றது. அந்த கணக்கெடுப்பின் போதுதான் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

    அதாவது நத்தம் நிலங்களில் பல வருடமாகவே வசித்து வரும் மக்களுக்கு முறையான பட்டாக்கள் எதுவும் இல்லாததால், அவர்கள் தங்களது சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு கூட அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற முடியாத ஒரு முட்டுக்கட்டை நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏழை மக்களின் இந்த நிலையை உணர்ந்த அப்போதைய அரசு, நத்தம் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு முறைப்படி பட்டா வழங்க அதிரடியாக முடிவு செய்தது.

    Advertisement

    அடங்கல் - அரசு ஆவணங்கள்

    அதன்படி அங்கு வசித்து வந்த மக்கள் தங்களின் உரிய ஆதாரங்களை வருவாய் துறையிடம் சமர்ப்பித்து, எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் பட்டாக்களைப் பெற்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

    ஆனால் இந்த நடைமுறையில் கடந்த 2023ம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய இடி விழுந்தது. அப்போது இருந்த வருவாய் துறை ஒரு புதிய அரசாணையை திடீரென்று வெளியிட்டது. நத்தம் நிலங்களை அடங்கல் போன்ற அரசு ஆவணங்களில் குறிப்பிடுவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அதற்கு ஒரு நிரந்தர தீர்வாகவே இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதாகவும் அதில் கூறப்பட்டது.

    Advertisement

    பட்டா வழங்கப்படாத நத்தம் நிலங்கள்

    இந்த புதிய நடைமுறையின்படி, ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட நத்தம் நிலங்கள் அனைத்தும் "ரயத்துவாரி" நிலங்கள் என்றும், இதுவரை பட்டா வழங்கப்படாத நத்தம் நிலங்கள் அனைத்தும் "அரசு புறம்போக்கு" நிலங்கள் என்றும் அதிரடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதோடு விஷயம் நின்றுவிடவில்லை, அதற்குப் பிறகு நத்தம் நிலங்களுக்கு தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கும் ஒட்டுமொத்த நடைமுறையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனைதான் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.

    இதுகுறித்து தங்களது வேதனையை வெளிப்படுத்திய பொதுமக்கள், கடந்த ஆட்சியில் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதாக சொல்லி, பட்டா வழங்குவதற்கே ஒட்டுமொத்தமாக தடை விதித்துவிட்டனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.. இதனால் ஏற்கனவே பட்டாவிற்கு விண்ணப்பித்து, இன்னும் பெறாமல் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Advertisement

    அரசு புறம்போக்கு நிலங்கள்

    பட்டா இல்லாத நத்தம் நிலங்களை அரசு புறம்போக்கு என்று மாற்றிவிட்டதால், காலம் காலமாக அங்கு வாழும் ஏழைகளுக்கு பட்டா தருவது நிறுத்தப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.

    நிர்வாக வசதிக்காக நிலத்தின் பெயரை மாற்றுவது வேறு, மக்களுக்கு பட்டா வழங்குவது வேறு என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஏற்றவாறு அந்த அரசாணையை உடனடியாக திருத்த வேண்டும் என்றும் அரசிடம் பொதுமக்கள் மனு அளித்திருக்கிறார்கள்.

    பட்டா கனவை நனவாக்குமா

    கடந்த ஆட்சியில் நடந்த இந்த குளறுபடிக்கு, தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நிச்சயம் ஒரு நல்ல முடிவை எடுத்து, தங்களின் பட்டா கனவை நனவாக்கும் என்று ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு ஆவலுடன் காத்திருக்கிறார்களாம்..!!!

    English Summary

    Natham Poramboke Land Row: Sudden Turnaround From Govt? Will There Be Relief For ‘This’ Shocking Patta Hold?