சென்னை: அதிமுகவில் ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்தே ஒற்றுமை இல்லை. கடந்த 6 வருடங்களாகக் கட்சி பிளவுகளையும் பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கட்சியை கட்டிக்காக்க எடப்பாடி பழனிசாமி உடனடியாக செய்ய வேண்டியது இதுதான் என்று வழக்கறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான கோடீஸ்வரன் சில கருத்துக்களை தெரிவித்தள்ளார்..
ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதியில் தற்போது அதிமுக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்துள்ள 13வது தோல்வி, கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. மேலும், அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூடுதல் எம்எல்ஏக்களை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "அதிமுக தோல்விக்கான காரணம் என்னவென்று கட்சியினருக்கே தெரியும். தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை, பணம் செலவழிக்கவில்லை, கட்சிக்காக உழைக்கவில்லை. தோல்வியை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு, இப்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதால் என்ன பயன்? அதிமுகவில் ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்தே ஒற்றுமை இல்லை. கடந்த 6 வருடங்களாகக் கட்சி பிளவுகளையும் பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா சொன்னதைப் போல, கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களையும் நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமிக்கலாம். சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் நீக்கப்பட்டபோதுகூட ஏற்படாத அளவிலான பெரிய பிரச்சினைகள் இப்போது ஏற்படப்போவதில்லை. உடனடியாக தேர்தலும் இல்லை. எனவே, கட்சியை மறுசீரமைக்க இது சரியான நேரம். கடந்த 6 மாதங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு போன்ற விஷயங்களைப் பற்றி தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பேசியிருக்கிறார்களா? மக்களுக்காக அரசியல் செய்வதாகச் சொல்கிறவர்கள், மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் இருப்பது எப்படி சரியாகும்? கட்சிக்குள் யார் யாருடன் இணைவது என்பதைப் பற்றி விவாதிப்பதில் செலவிடும் நேரத்தில், மக்களின் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.. அரசியலில் யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக வருவார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா? அதுபோல, விராலிமலை விஜயபாஸ்கர் போன்றவர்களுக்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். அவர் நன்றாகப் பேசக்கூடியவர்.. அரசியல் அனுபவமும் திறமையும் கொண்டவர். எனவே எடப்பாடி பழனிசாமி இளம் தலைவர்களை அடையாளம் கண்டு, குற்ற வழக்குகள் இல்லாதவர்களுக்கும், நல்ல திறமையுள்ள ஒன்றியச் செயலாளர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளலாமே என்கிறார்கள்.. தினகரன் இப்போது தனியாகக் கட்சி நடத்துகிறார். அவரிடம் தனிச் சின்னமும் இருக்கிறது. அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை உண்மையான அக்கறையுடன் முன்வைக்கிறார்களா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகச் சொல்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. தினகரன் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவருடைய அரசியல் பிரச்சினைகளுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். அவரை வைத்து எடப்பாடி பழனிசாமியைக் கட்டுப்படுத்த நினைப்பது சிறிய அரசியல்" என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
அதிமுக தோல்விக்கான காரணம்
பழ.கருப்பையா கருத்து
2ம் கட்ட தலைவர்கள்
எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய வேண்டும்