நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.. சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்!

  • சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கி நடைபெற்றது. பாஜக தரப்பில் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வெளிநடப்பு செய்யப்பட்ட நிலையில், தீர்மானம் இறுதியாக ஒருமனதாக நிறைவேறியது.

    Advertisement

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேகதாது விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முன்னுரிமை ஆகியவற்றுக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் பட்ஜெட் மீதான விவாதமும் நடந்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் சட்டசபையில் இன்று தமிழக அரசு சார்பாக 2 தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவப் பாட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.

    நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவகளின் நம்பிக்கை இந்த தேர்வு இழந்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதா 2021ல் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

    Advertisement

    சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்த அருண்ராஜ், நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் மாணவர்கள் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.

    நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வு அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருக வழிவகுக்கிறது. அதேபோல் நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை நீட் தேர்வு இழந்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். மாநிலங்களின் உரிமையை மதிப்பதே கூட்டாட்சி முறையாகும். இதனால் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநிலத்தின் கருத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

    திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த விவாதத்திற்கு பின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை தற்போதைய வடிவிலேயே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

    Advertisement

    இந்த தீர்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது.

    English Summary

    NEET Exam: TN Assembly to Pass Standalone Resolutions Against NEET and FCRA Amendment Bill Today