சென்னை நீட் போராட்ட களத்தில் “ஒன்இந்தியா“!.. 11 நாட்களாக நடப்பது என்ன?

  • சென்னை: சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆவது நாளாக நடைபெற்ற வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித்திடம் தொலைபேசியில் பேசியதாகவும், நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடு என்று அவர் தெளிவாக கூறினார் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    Advertisement

    சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆவது நாளாக நடைபெற்ற வருகிறது. இந்தப் போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஓரிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டக் குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த போராட்டம் குறித்து போராட்டக் குழுவினர் ஒன் இந்தியா தமிழிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு அரசிடம் இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. சட்டப் பேரவையில் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளோம்.

    சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், போராட்டத்திற்கான இடம் தொடர்பாக அரசிடமிருந்து இதுவரை தகவலும் வரவில்லை. எங்களுடைய பட்டினி போராட்டம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கட்சிகளைக் கடந்து, இயக்கங்களைக் கடந்து மாநில உரிமைக்காக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கைக்காக எங்களுடைய போராட்டம் தொடரும் என்று கூறினர்.

    Advertisement

    தொடர்ந்து போராட ஓரிடம்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புளியந்தோப்பு மோகன் கூறுகையில், மத்திய அரசிடம் 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். நீட் தேர்வு தடை, மாநிலப் பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட உணவு கொடுத்ததற்காக இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அரசியல் வன்முறைகளை உடனே நிறுத்த வேண்டும் என்று 4 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. நீட்டை தடை கோரி போராடும் இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக போராட ஒரு இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

    Advertisement

    அபிஜீத் என்ன சொன்னார்?

    மேலும், சிஜேபி தலைவர் அபிஜீத்திடம் தொலைபேசியில் பேசியது குறித்த கேள்விக்கு, நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே சிஜேபியின் நிலைப்பாடு என்று அபிஜீத் தெளிவாகக் கூறினார். தமிழ்நாடு போராட்டம் குறித்து பேச வேண்டும் என்றும், வட இந்தியாவில் இருந்து வரக்கூடிய அரசியல்வாதிகள் தென்னிந்தியாவின் குரல்களை பெரிதாக பிரதிபலிப்பதில்லை, அந்த வரலாறு மீண்டும் பிரதிபலிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தோம்.

    அப்போது, அவர் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து தான் பேசுவதாக கூறினார். மேலும், உடல்நிலை சரியானதும் போராட்டத்தில் நேரில் பங்கேற்க வருகிறேன் என்றும் உறுதியளித்துள்ளார் என்று கூறினார். மேலும், சென்னையில் போராட்டங்களை நடத்துவதற்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அபிஜீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

    Advertisement

    தவெக அரசு ஆதரவு

    தவெக அரசு நேர்மறையான நிலைப்பாட்டை காட்டுகின்றனர். இதுவரை அமைச்சர்கள் ராஜ்மோகன், அருண்ராஜ், லயோலா மணி, கொறடா சபரி ஆகியோர் இரண்டு முறை எங்களை வந்து சந்தித்துப் பேசினர். இரண்டு முறையும் எங்களுடைய கோரிக்கையை கேட்டதோடு, எங்கள் உடல்நிலையிலும் மிகுந்த அக்கறையோடு இருக்கின்றனர். மருத்துவ மானியக் கோரிக்கை 17 ஆம் தேதி தான் நடைபெற வேண்டும்.

    ஆனால், நேற்றே தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றனர். இருப்பினும், நீட்டை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவதற்கு எங்களுக்கு ஒரு இடம் தேவை. கண்டிப்பாக இந்த அரசால் இதை செய்ய முடியும். கடந்த அரசுகள் போராட்டத்தைக் கண்டு அஞ்சினார்கள். தவெக அரசு மக்களுக்கான அரசாக நடத்துவோம் என்று கூறுகின்றனர். இந்த நீட்டுக்கு எதிரான போராட்டம் என்பது தமிழக அரசை எதிர்த்தோ, தமிழக முதலமைச்சரை எதிர்த்தோ இல்லை.

    Advertisement

    எங்கள் போராட்டம் முழுக்க முழுக்க பாசிச பாஜகவை எதிர்த்து தான். நீட் தேர்வு ரத்தை தமிழகத்தால் சாத்தியப்படுத்த முடியும். அந்த வரலாறு தமிழகத்துக்கு உள்ளது. அதனை சாத்தியப்படுத்த வேண்டும். அதனால், தொடர்ந்து போராடுவதற்கு எங்களுக்கு ஓரிடம் வேண்டும் என்று கூறினர்.

    English Summary

    11-day NEET protest in Chennai continues, with protesters saying CJP leader Abhijit supports the demand to scrap NEET and has assured them of his support.