நீட் மறு தேர்வு 2026: எப்படி இருந்தது.. ஈசியா அல்லது கடினமாக? மாணவர்கள் சொல்வது என்ன?


  • சென்னை: நீட் மறு தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 22 லட்சம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தேர்வு 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணிக்கு முடிந்தது. நீட் மறு தேர்வு, ரத்து செய்யப்பட்ட தேர்வை விட கடினமாக இருந்ததாகவும், ஒன்றிரண்டு கேள்விகள், கடந்த தேர்வில் கேட்கப்பட்டதே திரும்பவும் கேட்கப்பட்டு இருந்ததாகவும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக பலத்த பாதுகாப்புடன் இன்று நீட் மறு தேர்வு நடந்தது. வினாத்தாள் கசிந்துவிட கூடாது என்பதற்காக மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித்து இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டன. இதையடுத்து இன்று நீட் மறுதேர்வு நடந்து முடிந்துள்ளது.

    Advertisement

    இயற்பியல் பகுதி மிகவும் கடினமாக இருந்தது

    நாடு முழுவதும் 22.79 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அளித்த முதல் கருத்துகளில், இயற்பியல் பகுதி கடினமாகவும், கேள்வித்தாள் மொத்தத்தில் நீளமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை விட, இன்று நடைபெற்ற நீட் மறுதேர்வு மிகவும் நீளமானதாகவும், கடினமானதாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கூறியதாவது:- இயற்பியல் பகுதி மிகவும் கடினமாக இருந்தது. வேதியியல் கேள்விகள் சவாலானதாக இருந்ததாகவும், உயிரியல் பகுதி நீளமாக இருந்ததாகவும் கூறினர். மேலும், மறுதேர்வில் இடம்பெற்ற கேள்விகளில் 2 முதல் 3 கேள்விகள் வரை ஏற்கனவே முந்தைய தேர்வில் வந்த கேள்விகளே மீண்டும் இடம்பெற்றிருந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    உயிரியல் பகுதி எளிதாக இருந்தது

    மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், "நீட் மறுதேர்வில் உயிரியல் பகுதி மிகவும் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான கேள்விகள் ஓரளவுக்கு கடினமாக இருந்ததாகவும்" கூறினார். மேலும் "மே 3-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய தேர்வே இதைவிட சிறப்பாக இருந்தது" என்று கூறினார். பெரும்பாலான மாணவர்கள் முந்தைய தேர்வை விட கடினமாக இருந்ததாகவே கூறுவதை பார்க்க முடிந்தது.

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். தேசிய தேர்வு முகமை இந்த நீட் தேர்வை நடத்துகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையானது நடந்து வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் நாடு முழுக்க நீட் தேர்வு நடந்து வருகிறது.

    Advertisement

    2.29 லட்சம் பேர் எழுதினர்

    ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் (மே) 3 ஆம் தேதி நடந்தது. அப்போது தேர்வினை சுமார் 22 லட்சம் மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் எழுதியிருந்தனர். ஆனால் வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த தகவலால் நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தேர்வு எழுதி காத்திருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தேர்வில் எவ்வளவு மதிப்பெண் வரும்? மருத்துவப் படிப்பு ஆசை நிறைவேறிவிடுமா? என காத்திருந்த நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். மீண்டும் நீட் மறுதேர்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறை வினாத்தாள் கசிந்துவிட கூடாது என்பதற்காக தேசிய தேர்வு முகமை வினாத்தாளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முழு பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தினார்கள்.

    Advertisement

    மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் வினாத்தாள்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு வந்து சேர்ந்தன. பின்னர் அரசு பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று நீட் மறுதேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. நாட்டில் மொத்தம் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 5 ஆயிரத்து 440 தேர்வு மையங்களில் சுமார் 22.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 307 தேர்வு மையங்களில் 1,42,489 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்களில் 22,128 பேர் தேர்வு எழுதினர்.

    English Summary

    NEET UG 2026 re-exam concluded successfully with over 22.79 lakh candidates appearing nationwide. Students described the paper as lengthier and tougher than the May 3 exam, with Physics considered difficult, Chemistry moderate and Biology relatively easier.