நேபாள வெள்ளத்தில் 37 தமிழர்கள் கதி? கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி சொன்ன தகவல்.. நடந்தது என்ன?

  • சென்னை: நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருக்கயிலாயம் செல்வதற்காக சென்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பக்தர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்... இதில் பாதிக்கப்பட்ட பயணிகளை நேரில் கண்டு மீட்டுள்ளார் ஏஜென்சியின் மேற்பார்வையாளர் ஓசூரை சேர்ந்த ரகுநாதன்.. இவர் கும்பகோணம் தாசில்தார் பூங்கொடியிடம் வாட்ஸ்அப்பில், அந்த மீட்பு காட்சிகள் குறித்து விவரித்துள்ளார். அதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    நேபாள வெள்ளத்தில், தமிழகத்தை சேர்ந்த 57 பக்தர்கள் சிக்கியிருக்கிறார்கள்.. கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் இயங்கும் "சூப்பர் யாத்ரா" என்ற ஏஜென்சி மூலமாக இந்த ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    நேபாள வெள்ளம்

    இந்த ஏஜென்சியின் சூப்பர்வைசர் ரகுநாதன்.. இவர் கும்பகோணம் தாசில்தாரிடம் சொல்லும்போது, "57 பக்தர்களை கைலாய யாத்திரைக்காக அழைத்து சென்றோம்.. கும்பகோணத்திலிருந்து 3 வேன்களில் சென்னை சென்றோம்.

    நாங்கள் 3 பேரும் ஒவ்வொரு வாகனத்திலும் தனித்தனியாக மேற்பார்வை செய்தபடி பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போது சரியாக திபெத் எல்லை செல்வதற்கு இன்னும் 40 கிலோமீட்டர் தூரம் இருக்கும்போது, திடீரென ஒரு நிலநடுக்கம் போல, ஏதோ குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டது. அப்போது மேகமூட்டம் அப்படியே முழுமையாக மூடிக்கொண்டது.

    குபீரென வந்த வெள்ளம்

    அளவுக்கதிகமான புழுதி கிளம்பியதால் கண் முன்னே ஒன்றுமே தெரியவில்லை. ஒரே கூச்சலும் சத்தமுமாக இருந்தது. அப்போது ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து வேகமாக வந்தது. அதை பார்த்ததும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. எங்களுக்கு முன்னால் சென்ற எந்த வாகனமும் கண்ணில் படவில்லை..

    Advertisement

    நாங்கள் நின்றுகொண்டிருந்த பகுதியில், தண்ணீர் வரத்து அதிகரிக்க, அதிகரிக்க ஒவ்வொரு வாகனமாக முழுமையாக மூழ்கி, வெள்ளநீர் இழுக்க ஆரம்பித்துவிட்டது. எங்களுக்கு பின்னால் இருந்த அந்த ஊரே அடித்து சென்றது.. கடைகள், லாரிகள் என மொத்தமும் நீரில் போனது.. எங்களுக்கு ஓரமாக சிறிய இடம் இருந்ததாலும், எங்களுக்குக் குறுக்கே 2 கார்கள் வந்து நின்றதாலும் நாங்கள் உயிர் தப்பினோம். மற்றபடி அந்த அனைத்து வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

    37 தமிழர்கள் கதி?

    எங்களோடு வந்த மற்ற 2 வாகனங்கள் எங்கே போனது என தெரியவில்லை. எங்களுக்கு முன்னால் சென்ற வாகனம் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. எங்கள் வாகனம் மற்றும் இன்னொரு வாகனத்தில் மொத்தம் 8 பேர் மட்டும் வந்தனர். அந்த வாகனமும் கவிழ்ந்துவிட்டது, ஆனால் அவர்கள் சத்தம் கேட்டவுடன் கண்ணாடியை உடைத்து இறங்கிவிட்டார்கள். இதில் காப்பாற்றப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்றனர். ஆனால், அதில் நமது தமிழர்கள் யாரும் இல்லை.

    Advertisement

    நாங்கள் ராணுவப் பாதுகாப்போடு பாதுகாப்பான இப்போது ஓரத்தில் இருக்கிறோம். ஆனாலும் எங்களுக்கும் கொஞ்சம் ஆபத்துதான் என்கிறார்கள்.. இப்போதைக்கு நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறோம். இங்கே எல்லோரும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். எங்களது தொடர்பு கிடைத்தவுடன் கும்பகோணம் தாலுகா அலுவலகத்திற்குத் தகவலைத் தெரிவிக்கிறோம்" என்கிறார் அச்சம் விலகாமல்.

    கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி

    இந்த விபத்து குறித்த தகவலறிந்ததுமே, கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி சூப்பர் யாத்ரா ஏஜென்சியில் விசாரணை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கும் இப்போது போன் லைன் கிடைக்காததால், வாட்ஸ்அப் கால் மூலமாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம்.. இதில் ரகு என்பவர் மூலம் தொடர்பு கிடைத்துள்ளதால், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், சரியான செய்தி வந்ததும் தெரிவிக்கிறோம்.

    Advertisement

    கும்பகோணம், தஞ்சாவூர், அம்மாபேட்டை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்களும் சென்றிருக்கிறார்கள், அதில் கணவன்-மனைவி போன்றோரும், சில பேர் தனிநபர்களாகவும் சென்றிருக்கிறார்கள்" என்றார்.

    மற்றொருபுறம் கும்பகோணம் மேற்கு போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நேபாளத்தில் முகாமிட்டுள்ள ராணுவத்தினரின் உதவியுடன் காணாமல் போன பக்தர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    English Summary

    Nepal Flood 37 Tamil Pilgrims Stranded.. Kumbakonam Tahsildar Poongodi Reveals Key Details.. What Happened?