நேபாளம் பெருவெள்ளம்.. 34 தமிழர்களின் தகவல் கிடைக்கவில்லை.. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த விளக்கம்!

  • சென்னை: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். 34 தமிழர்கள் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ள ராஜ்மோகன், தமிழக அரசின் உதவி எண்களுக்கு இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நேபாளம் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீட்பு தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    நேபாளம் சென்ற குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இங்குள்ளவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர். எத்தனை பேரை மீட்டுள்ளோம்? தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளது?

    அந்த அழைப்புகள் தொடர்பாக என்ன மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழர்களை மீட்க ஏதாவது சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா? அவர்கள் நேபாளம் செல்ல ஏதேனும் திட்டம் இருக்கிறதா? இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

    Advertisement

    இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து பதில் அளிக்கையில், தமிழ்நாட்டில் இருந்து 103 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேபாளம் பெருவெள்ளத்தில் தப்பி அங்குள்ள திமுரே முகாமில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை சாலை வழியாக காத்மாண்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நேபாளம் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை கண்காணித்து வருகிறோம். 34 தமிழர்கள் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து தேடி வருகிறோம். இந்த பெரு வெள்ளத்தில் 80 பாலங்கள், 40 கிமீ சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. அதேபோல் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன என்று தெரிவித்தார்.

    English Summary

    Nepal Floods: 34 Tamils Untraceable in Nepal Floods, Minister Rajmohan Outlines State Rescue Actions