'டாஸ்மாக் ஊழியர்கள் 1 லட்சம் சம்பளம் வாங்கினாலும்'.. நெட்டிசன் கேள்வி.. அமைச்சர் பதில்

  • சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திய போதிலும், அவர்கள் பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவது இன்னும் நிற்கவே இல்லை. இது தொடர்பாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, அவர்களுக்குச் சம்பளம் எவ்வளவு குறைவாக உள்ளது, அவர்களின் சுற்றுப்புறச் சூழல் என்ன என்பதையும் தெளிவாக விவரித்தார். ஆனால் என்னதான் அவர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் கூட அவர்கள் எக்ஸ்ட்ரா பணம் வாங்குவதை நிறுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அமைச்சர் விக்னேஷ் சட்டெனப் பதிலளித்துள்ளார். இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

    Advertisement

    2003 ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபானங்களை விற்கும் என்று அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. அப்போது வெறும் 2000, 3000 என்ற ஊதிய அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் தான் டாஸ்மாக் ஊழியர்கள். சுமார் 23 ஆண்டுகள் அவர்கள் தற்போது பணியில் உள்ளார்கள். இந்த 23 ஆண்டுகளில் அவர்கள் சம்பளம் பெரிய அளவில் உயரவே இல்லை. என்றாவது ஒரு நாள் அரசு ஊழியர்களைப் போல் தாங்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களாக மாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
    ஆனால் கடந்த 23 ஆண்டுகளில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும் டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவோ அவர்களுக்கு ஊதியத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    Advertisement

    அதேநேரம் அவர்கள் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவதற்கு மறைமுகமாக ஆதரவாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது பெயருக்கு நடவடிக்கை எடுத்துவிட்டு, பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அவர்கள் எக்ஸ்ட்ரா வாங்கிக்கொள்வதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகப் புகார்கள் உள்ளன.

    எம்.ஆர்.பி-யை விட எந்தக் கடையிலும் ஒரு பொருளை அதிக விலைக்கு விற்க முடியாது. அப்படி விற்பது சட்டவிரோதம். ஆனால் எம்.ஆர்.பி-யை விடப் பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா தர வேண்டும் என்பது காலங்காலமாக எழுதப்படாத விதியாக டாஸ்மாக் கடைகளில் உள்ளது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய அரசு இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவே புகார்கள் அழுத்தமாக உள்ளன.

    Advertisement

    குடிமகன்களைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், அமைச்சர்கள் வரை இந்த விஷயத்தில் பங்கு உள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அரசுத் தரப்போ, டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாக உள்ளதால் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாகக் கூறுகிறது. இதனைச் சரிசெய்யச் சம்பளத்தை அதிகப்படியான அளவில் உயர்த்த வேண்டும் என்பது டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. அதாவது அரசு ஊழியர்களைப் போல் தாங்களும் மாற்றப்பட வேண்டும் என்பது டாஸ்மாக் பணியாளர்களின் விருப்பமாக உள்ளது. அப்படி ஊதிய உயர்வு கிடைத்து மாற்றினால் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதை விட்டுவிடுவோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

    Advertisement

    ஏனெனில் 23 வருடங்களுக்கு முன்பு அவர்கள் பணியில் சேர்ந்தபோது 3000 என்ற நிலையில் இருந்த ஊதியம், தற்போது 17,000 முதல் அதிகபட்சம் 20,000 என்ற அளவில் தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்த 23 ஆண்டுகள் அவர்கள் அரசு ஊழியர்களாகவோ தனியார் நிறுவனத்திலோ பணிபுரிந்து இருந்தால் ஊதியம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும். இந்தப் பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகியுள்ள மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், ஊழியர்களின் நியாயமான பிரச்சினைகளைப் பட்டியலிட்டதுடன் அதனைச் சரிசெய்யக் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

    இதுபற்றி அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், "தொழிலாளர்களின் உண்மையான தேவையை நிறைவேற்றி அவர்கள் இயங்குவதற்குச் சரியான வாய்ப்பை அளிக்க வேண்டும்! அதன்பின்னரும் தவறு நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவும் கடுமையாக! மாற்றம் ஒன்றே மாறாதது! நிச்சயம் மாற்றுவோம்!" என்றார்.

    Advertisement

    இது பற்றிச் கருத்து தெரிவித்த நெட்டிசன், "ஆக இனி டாஸ்மாக் தனியார்மயமாக்கல் நடக்கப் போவதில்லை.. அதானே. குடிமக்கள் இந்தச் சுமையைத் தொடர்ந்து தாங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஊழியர்கள் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். இந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் கொள்ளையடிப்பார்கள். இந்த டாஸ்மாக் சீர்திருத்தங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்..." என்று ஆதங்கத்தைத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், "பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார்.

    இதற்குப் பதிலளித்த நெட்டிசன், "சார், நீங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறீர்கள். 20 ஆண்டுகளில் முதல்முறையாக யாரோ ஒருவர் இதைச் செய்கிறார்கள். கர்நாடகா அல்லது மகாராஷ்டிரா வழியைப் பின்பற்றித் தனியார்மயமாக்குவது மட்டுமே ஒரே வழி ஐயா. தயவுசெய்து இதைப் பரிசீலிக்கவும்..." என்று கூறினார்.

    English Summary

    "A netizen commented that even if TASMAC employees are paid a salary of 1 lakh rupees, there is no chance they will stop collecting extra money. Minister Vignesh quickly responded to it."