யு.பி.ஐ. ஆப் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம்.. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி திட்டம்

  • சென்னை: இன்று பூக்கடை தொடங்கி பெரிய பெரிய வணிக வளாகங்கள் வரை எல்லா கடைகளிலும் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளைத்தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். வணிகர்களும் யுபிஐ பரிவர்த்தனைகளை விரும்புகிறார்கள். இந்த சூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    Advertisement

    இந்தியாவில் இன்று ரொக்கப்பரிவர்த்தனைகளை விட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் தான் அதிகம் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பனவு அமைப்பால் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.ஐ. தொழில்நுட்பம் தான் இன்று மொத்த இந்தியாவையும் ஆள்கிறது. காலையில் டீ குடிக்க டீக்கடைக்கு போவது தொடங்கி இரவில் ஓட்டலில் சாப்பிடுவது வரை எல்லாமே யுபிஐ தான் என்கிற அளவில் வளர்ந்துவிட்டது.

    Advertisement

    எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை மொபைல் நம்பரை மட்டும் வைத்து நேரடியாக அனுப்ப முடியும். இந்தியாவின் இந்த யுபிஐ திட்டத்தை சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.

    தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் பரவி வருகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    உதாரணமாக, ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது என்று கூறுகிறார்கள். இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் நடக்கும் பெரியளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

    இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை வங்கிகளும், கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக்கொண்டு வருகீன்றன.. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கிகளின் பராமரிப்புச் செலவுகளைச் சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையைக் கொண்டு வர நிதி அமைச்சகம் பரிசீலலிக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

    English Summary

    Sources within the Central Government indicate that merchant charges are likely to be fixed for UPI transactions. They also suggest that the Reserve Bank may soon announce the regulations regarding this.