Low Pressure: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் மிக கனமழை வெளுக்கும்.. ஐஎம்டி எச்சரிக்கை!

  • சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவு பகுதியில் வரும் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. எனினும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்துள்ளது.

    Advertisement

    வரும் 15 முதல் 21 ஆம் தேதிக்குள் தமிழகத்திற்கு மழைப்பொழிவை கொடுக்கும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. எல் நினோ தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் வடகிழக்கு பருவமழையாவது அதிக மழைப்பொழிவை தருமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    Advertisement

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் அக்டோபர் 15 முதல் 21 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் வரும் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை ஒட்டிய பகுதியில் வரும் 12 ஆம் தேதி வாக்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த நாளில் அதாவது வரும் 13 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

    Advertisement

    மிக கனமழை பெய்யும்

    இதனால் தமிழகம் மற்றும் புதுவை, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலோடு கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதே சமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு குறைவு" என்று கூறியுள்ளது.

    மதுரை, குமரியில் பலத்த மழை பெய்தது

    தமிழகத்தில் இன்று குமரி, மதுரையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியது. நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    திருச்சி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியிருந்தது.

    சென்னையில் இரவில் மழைக்கு வாய்ப்பு

    மேலும், சென்னையில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்து இருந்தது.

    Advertisement

    மேலும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது.

    English Summary

    Low Pressure: The India Meteorological Department has stated that a new low-pressure area is likely to form near the Andaman region on the 13th of this month. However, it also indicated that there is a low probability of this system intensifying into a depression. The department had previously announced that the Northeast Monsoon would commence between the 15th and the 21st.